செளபா : சிசுக் கொலையை ஊரறியச் செய்தவர், இன்று சொந்த மகன் கொலை வழக்கில்!

செளபா என்கிற பெயரை அறியாதவர்கள், ஊடக உலகில் இருக்க முடியாது. உசிலம்பட்டி பெண் சிசுக் கொலையை கட்டுரையாக தீட்டி, உலகை விழிப்புற வைத்தவர்!

செளபா என்கிற பெயரை அறியாதவர்கள், ஊடக உலகில் இருக்க முடியாது. உசிலம்பட்டி பெண் சிசுக் கொலையை கட்டுரையாக தீட்டி, உலகை விழிப்புற வைத்தவர்! ஆனால் இன்று தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகனை கொலை செய்த புகாரில் சிறைக்கு போயிருப்பதுதான் காலத்தின் விளையாட்டு!

செளபா, மதுரையை சேர்ந்தவர்! பிரபல வார இதழில் இவரது கட்டுரைகள் பல அட்டைப்படத்தை அலங்கரித்த காலங்கள் உண்டு. அந்தக் கட்டுரைகளில் ஒன்றுதான் உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து சிறுமிகளை சாகடித்து வந்த கொடூரம்! பின்னாளில் பாரதிராஜா எடுத்த கருத்தம்மா படத்தின் கதைக் களம் அதுதான்! செளபா, நெப்போலியன் நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.

செளபாவும் அவரது மனைவி லதா பூரணமும் 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் விபின் (வயது 27), தாய் மற்றும் தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செளபா மீது சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், பணத் தகராறில் தாம் சுத்தியால் அடித்ததில் மகன் இறந்ததாகவும் அவனது உடலை கொடைரோடு அருகே உள்ள தோட்டத்தில் புதைத்ததாகவும் செளபா ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் செளபாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செளபா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செளபா, கொலை வழக்கில் சிக்கியது குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: செளபா, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது மகன் விபின் பிறந்த பிறகு கொஞ்ச நாட்களில் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

தந்தையிடமும், தாயிடமும் மாறிமாறி வாழ்க்கையை ஓட்டிய விபின், சென்னையில் பிரபல கல்லூரியில் படித்தார். படிக்கும் போதே போதை, பெண் விவகாரம், பிரபல தாதாவுடன் மோதல், பல்வேறு பிரச்னை என நித்தமும் அவரது தந்தைக்கு ஏகப்பட்ட பிரச்னை. மகனுக்காக எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டபோதும், ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார்.

சர்க்கரை ,இதய நோயினால் பாதிக்கப்பட்ட செளபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார். கடந்த மாதம் அவரது அம்மாவை அடித்து தலையில் தீயை வைத்துள்ளார் அவரது மகன். ஒவ்வொரு மாதமும் உழைக்காமல் அப்பாவிடமும் , அம்மாவிடமும் பணத்தை வாங்கி ஊதாரியாக சுற்றியதோடு தாய் தந்தையரை மிக மோசமாக நடத்தி வந்துள்ளார். இதனால் பயங்கர அப்செட்டில் இருந்துள்ள செளபா இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பத்திரிகையாளராக இந்த சமூகத்தை மாற்றி அமைத்ததில் மிகப் பெரிய பங்கு செளபாவிற்கு உண்டு. ஆனால் அவரது சிந்தனை, உழைப்பும் எழுத்தும் அவருக்கு பயன் தராமல் போய் விட்டது. அவரது குடும்பச் சூழல், பிள்ளையை அதிக செல்லம் கொடுத்து கண்டிக்காமல் வளர்த்தது இப்போது காவல் நிலையம் வரை கொண்டு வந்துள்ளது.

பாரதிராஜா, இளையராஜா, சமுத்திரக்கனி, பாலா, கரு.பழனியப்பன், ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் என்று இவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியல் மிக நீளம். இவர்கள் அனைவரும் செளபாவின் தோட்டதில் கூடி கழித்த நாட்கள் உண்டு. அந்த தோட்டம் இன்று ஒரு உயிரை அதுவும் பெற்ற மகனையே விழுங்கி இருக்கிறது என்றால், பயங்கரம்தான்!

மிகச் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சிந்தனைவாதி இன்று சிறைக் கொட்டடியில் நிற்கிறார். உறவுச் சிக்கல், அதன் பின் எழும் பிரச்சினைகள் எவ்வளவு கொடூரமானது என்பதை இது உணர்த்துகிறது.

செளபாவை ஒரு நாள் காவலில் எடுத்த போலீஸார் இன்று (மே 11) அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று விபினை எரித்து புதைத்த இடத்தை காண்பிக்க கூறி விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் செளபாவுக்கு உதவிய அவரது தோட்டத்தின் ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close