ஆளுநர் செய்யும் செயலா இது? பத்திரிக்கையாளர்கள் கண்டனம்

செய்தியாளர்கள் சந்திப்பில், ஆளுநர் புரோஹித் பெண் பத்திரிக்கையாளர் அனுமதியின்றி கன்னத்தை தட்டிக்கொடுத்தை பத்திரிக்கையாளர்கள் கண்டித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாணவர்களைத் தவறான காரணத்திற்கு உபயோகப்படுத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா 5 மாணவிகளிடம் கான்ஃபரன்ஸ் கால் போட்டு பேசிய உரையாடல் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியாகிய அந்த உரையாடலில் நிர்மலா தனக்கு ஆளுநர் அளவுக்கு செல்வாக்கு உள்ளதாகவும், எதையும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவர் நிர்மலா தேவி வழக்கு பற்றி விளங்களை அளித்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு புரோஹித் புறப்பட முற்பட்டபோது, செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நாட்டில் நிகழ்ந்து வரும் விஷயங்கள் குறித்து யாராக இருந்தாலும், அவரிடம் கேள்வி கேட்பது செய்தியாளர்களின் கடமை. மேலும் மக்களுக்கு உண்மை தகவல்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பில் இருப்பவர்கள். இது போல் தனது கடமை தவறாது கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளரிடம் கவர்நர் நடந்து கொண்டது முறையானதா? இது போல் நடந்துகொள்ள அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்று பல கேள்விகள் நம்மிடையே எழுந்து வருகிறது.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்து விட்டாரா புரோஹித்? தாத்தாவாகவே இருந்தாலும் ஒரு பெண்ணை தொட்டுப் பேசும் உரிமை இல்லை என்பதை அறியாதவாறு அவர் நடந்து கொண்டது கண்டனத்திற்குரிய செயலாக உள்ளது. இங்கு யாரும் யாருக்கும் பேத்தியாக இருக்க விரும்பவில்லை, எங்களுக்கு இது போன்ற தாத்தாக்கள் தேவையும் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு கடும் எதிர்ப்புகள் எழும் அளவிற்கு நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது என்ன என்பதைச் சம்பவத்திற்கு தொடர்புடைய தி வீக் பெண் பத்திரிக்கையாளர் லஷ்மி சுப்பிரமணியன் விளக்குகிறார். அவரது வார்த்தைகளில் தி வீக் பத்திரிக்கையில் வெளியான செய்தி,

“நான் கடும் கோபத்தில் உள்ளேன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். நீங்கள் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் ஆதரவாக இருப்பதுபோல், என்னுடைய அனுமதி இல்லாமல் எனது கன்னத்தை தட்டிக் கொடுத்து அதைப் பதிலாக அளித்தீர்கள். பாலியல் ரீதியாக உங்களுக்கு எதிராக எழுந்துள்ள புகார் குறித்து நீண்ட நேரம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தீர்கள். உங்களைப் பொருத்த வரை அந்தச் செயல் பாராட்டாகவோ, “தாத்தா பேத்திக்கு” தட்டிக்கொடுப்பது போலவோ இருக்கலாம், ஆனால் எனக்கு அது தேவையற்ற, வரவேற்கப்படாத செயலாகும். ஏனெனில், எனக்குத் தேவை என் கேள்விக்கான பதில் மட்டுமே, என் கன்னத்தில் தட்டிக்கொடுப்பது அல்ல.

அன்றைய நாள் முழுவதும் பேராசிரியை நிர்மலா தேவி புகார் குறித்து செய்திகளைக் குவிந்திருந்தது. இந்த விவகாரல் அரசியல் குறித்து மற்றும் அதன் சர்ச்சைகள் குறித்து நானும் எழுதினேன். ஆளுநர் மாளிகையில் இருந்து, மாலை 6 மணிக்குச் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டதால், எனது மனோரமா டி.வி குழுவுடன் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஒரு பத்திரிக்கையாளராக சென்றேன்.

செய்தியாளர்கள் சந்திப்பில், நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நிர்மலா வழக்கில் அவர் மீது பரவி வரும் பாலியல் ரீதியான புகார்கள் குறித்து 3 அல்லது 4 கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் கடும் கோபத்துடன், ‘இந்தப் புகார் அனைத்தும் அபத்தமானது’ என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விவகாரங்கள், புரோஹித்தின் ஆளுமை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மற்றொரு பத்திரிக்கையாளர், நிர்மலா மாணவிகளுடன் பேசிய உரையாடலில் ஆளுநரின் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து கேட்டார். உடனே ஆளுநரின் முகம் செவந்து, ‘நிர்மலாவை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை’ என்று கூறினார்.

சந்திப்பின் முழு நேரத்திலும், தமிழ்நாட்டின் ஆளுமை மற்றும் உயர் அதிகாரி அவர்தான் என்பதால், வழக்கை விசாரிக்கக் குழு அமைக்க அவருக்கு அதிகாரம் உள்ளது என்றார். மேலும் பல்கலைக்கழகத்தின் விதிமுறை பின்பற்றியே ஓய்வுபெற்ற அதிகாரி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்துள்ளதாக கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டுச் செல்ல இருக்கையில் இருந்து ஆளுநர் எழுந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், ஆளுநரின் தமிழ் கற்பிக்கும் ஆர்வம் குறித்து கேட்டார். அதற்கு, ‘தமிழ் ஒரு இனிமையான மொழி’ என்று அவர் பதிலளித்தார்.

இந்தக் கேள்விக்கு பதில் கூறும் வேளை நானும் அவர் அருகில் இருந்தேன். என்னுடன் எனது தோழி லாவண்யாவும் இருந்தார். பிறகு அடுத்த கேள்வியாக நானும் லாவண்யாவும், ஆளுநரிடம் அவரின் தமிழ் ஆசியர் யார் என்று கேட்டோம். இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பின்னர், எனது அடுத்த கேள்வியை நான் கேட்டேன். ‘நீங்கள் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளீர்கள். பல்கலைக்கழகங்களின் நடைமுறையும் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?’ என்று கேட்டேன்.
எனது இந்தக் கேள்விக்கு பதில் கூறாமல் எனது கன்னத்தை தட்டிக்கொடுத்தார். கவர்நரின் செயலால் நான் அதிர்ந்து போனேன். இந்தச் செயலை கண்ட லாவண்யா என்னை ஆறுதல் அளித்தார். உடனே அந்த இடத்திலிருந்து நான் நகர்ந்துவிட்டேன். பின்னர் பல முறை எனது முகத்தைக் கழுவினேன். இது குறித்து ட்விட்டர் மற்றும் முகநூலில் நான் பதிவுகள் பகிர்ந்தேன். இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பலர் எனக்கு ஆதரவும் அளித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

இந்தச் சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், ஆளுநர் தனது பேத்தியைத் தட்டிக்கொடுக்கும் தாத்தாவைப் போலவே இதைச் செய்துள்ளார் என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. பன்வாரிலால் புரோஹித் இந்த மாநிலத்தின் ஆளுநர். நான் ஒரு பத்திரிக்கையாளர். எனது கேள்விகளுக்கு அவர் பதில்தான் கூற வேண்டும், கன்னத்தில் தட்டிக்கொடுக்க கூடாது.

இது ஒரு முறைகேடான செயல். யார் என்று கூட தெரியாத பெண்ணிடம் , அனுமதியின்றி தொட்டுப் பேசுவது அனுமதிக்க முடியாத செயல்.”

இவ்வாறு நிகழ்ந்ததை ஆதங்கத்துடன் விளக்கியுள்ளார் அந்தப் பெண் பத்திரிக்கையாளர். மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆளுநரின் நடத்தைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில், லஷ்மி பதிவுப்படுத்திய விவரம்:

 

இணையதளம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தச் செயலுக்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close