Advertisment

விளிம்பு நிலை மக்களுக்கு கோவிட் தடுப்பூசி எப்படி சென்றது? M-RITE திட்டத்தை பற்றிய தொகுப்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு கொரோனா பெருந்தொடரின் விழிப்புணர்வும் தடுப்பூசியும் எப்படி சென்றடைந்தது என்பது பற்றின தொகுப்பு.

author-image
WebDesk
New Update
விளிம்பு நிலை மக்களுக்கு கோவிட் தடுப்பூசி எப்படி சென்றது? M-RITE திட்டத்தை பற்றிய தொகுப்பு

கோவிட் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது. (Express Photo: Gokul Subramaniam)

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ல் கோவிட்-19 பாதிப்பு குறைந்திருந்தாலும், விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே தடுப்பூசி தயக்கம் அதிகமாக உள்ளது. 

Advertisment

மரண பயம், நோய், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான தகவல் ஆகியவை இம்மக்களை தயங்க செய்கிறது.

தடுப்பூசி போடுவதற்காக அரசு ஊழியர்கள் தங்கள் ஊரிற்கு வருகைதந்தால் அவரவர் தங்களுடைய வீடுகளுக்குள் ஓடுவதும், காடுகளுக்குள் ஒளிந்து கொள்வதும், தன்னார்வலர்களிடம் பணம் கேட்பது என, தமிழ்நாட்டில் உள்ள பல விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

publive-image

இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள பல விளிம்பு நிலை சமூகங்களின் மக்களுக்கு, தடுப்பூசி போட அரசாங்கத்திற்கு உதவுவதற்காக (Momentum Routine Immunization Transformation and Equity - M-RITE) திட்டம் பணியாற்றுகிறது. இந்த திட்டம், USAID ஆல் ஆதரிக்கப்பட்டு ஜான் ஸ்னோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டது.

ஆஷா மற்றும் அங்கன்வாடி (சுகாதாரம் தொடர்பான அரசு சாரா நிறுவனங்கள்) பணியாளர்கள் பணிபுரிந்த போதிலும், இந்த சமூகத்தினரின் தடுப்பூசி தயக்கத்தை சமாளிக்க மாநில அரசுக்கு அதிக தன்னார்வலர்கள் தேவைப்பட்டன.

இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் உள்ள M-RITE மாவட்ட திட்ட அலுவலர் பி.கபிலன் கூறியதாவது: 

"தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதும், மக்கள் தயக்கமின்றி அவற்றை எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது, மக்கள் தங்களின் முதல் அல்லது இரண்டாவது டோஸ்களைத் தவறவிட்டால் அதை கண்டறிந்து கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்துவதே எங்களின் வேலை ஆகும்.

இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை பயன்படுத்தி திருநங்கைகள் மத்தியில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை தெரியப்படுத்தினோம்", என்று கூறினார்.

இதை தொடர்ந்து, M-RITE அதிகாரிகள் கூறுகையில், "திருநங்கைகள் பண்டிகையின் போது மது அருந்துவது மற்றும் ஹார்மோன் மருந்துகளை உட்கொள்வதால், கொரோனா தடுப்பூசிக்கு பெரும்பாலும் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி அந்த பொருட்களை எடுத்துக்கொள்வதின் வீரியத்தை தடுக்கும் என்று அவர்கள் அஞ்சினார்கள்".

"நாங்கள் எல்.இ.டி. திரையில், இது தொடர்பான பாடங்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசுரங்கள் மூலம், அவர்கள் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இன்னும் தடுப்பூசி பெறலாம் என்று நாங்கள் புரியவைத்தோம்" என்று கபிலன் விளக்கினார்.

கூவகம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி முருகனுக்கு, இந்த பண்டிகை தொடங்கும் 15 நாட்களுக்கு முன்பு சாத்தி (அரசு சாரா நிறுவனம்) அவர்களைத் தொடர்பு கொண்டு தடுப்பூசி திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்று தெரிவித்ததாக கூறினார். மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 50,000 திருநங்கைகள் மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்த திருவிழாவிற்காக வருவதாக நாகலட்சுமி கூறினார்.

publive-image

தடுப்பூசி எடுத்த பிறகு மக்கள் இறக்கிறார்கள் என்ற வதந்திகள் நரிக்குறவர் சமூகத்தை தயங்க செய்தது.

“திருநங்கைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான இந்த முயற்சியுடன் 'சாத்தி' எங்களை அணுகியது. பஞ்சாயத்து மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்களின் விழிப்புணர்வை ஆரம்பிப்பதற்காக, திருவிழாவின் போது அவர்களுக்கென தனி இடம் அமைத்து கொடுத்தோம். 

டாக்டர்கள், பஞ்சாயத்து மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HRCE) உறுப்பினர்கள் என மூன்று குழுக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தனர். 18 நாள் திருவிழாவின் கடைசி இரண்டு நாட்களில் 15 திருநங்கைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன” என்று நாகலட்சுமி கூறினார்.

திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்டாடும் ஆண்டு விழாவின் போது, ​​தன்னார்வ தொண்டு நிறுவனம் அவர்களைத் திரட்டி, துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை அளித்தது. மேலும் அவர்களின் சமூகத்தில் உள்ள பிரபல தலைவர்கள் சிலரையும் தடுப்பூசியின் நன்மைகள் பற்றி விளக்கமளிக்க செய்தது.

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு செய்திகளைக் காண்பிப்பதற்காக தன்னார்வலர்கள் திருவிழாவின் போது, பெரிய LED திரையை வைத்தனர். 

காவல்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் (வி.எச்.என்.) கூவகம் திருவிழாவின் போது முடிந்தவரை பலருக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

30 வருடங்களாக இந்த திருவிழாவிற்கு வருகைதரும் திருநங்கையான அம்பிகா, 40, தனக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார். நோய்த்தொற்று ஏற்பட விரும்பாததால் தடுப்பூசி போட விரும்புவதாக அவர் கூறினார். 

தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி அவர் தனது சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார், மேலும் அவர்களில் ஒருசிலரை தடுப்பூசியை எடுக்க செய்தார். “மக்கள் அச்சப்படத் தேவையில்லை, தடுப்பூசி உடல் நலத்திற்கு நல்லது. அது நம்மை நோய்களில் இருந்து காக்கும்,” என்று வலியுறுத்தினார்.

M-RITE மாவட்ட திட்ட அலுவலர் கபிலன் கூறுகையில், "ஜிப்சிகள், திருநங்கைகள், நாடோடி பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 16,500 பேருக்கு ஜூன் மாதம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,052 பேருக்கு தடுப்பூசி போட்டோம். இதுவரை இங்கு 25,582 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருக்கோவிலூர் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுரம், சின்னசேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட ஒன்பது பிளாக்குகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில், 70 ஜிப்சி குடும்பங்கள், வண்ணமயமான மணிகள், காதணிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் பட்டதாரிகள் மற்றும் சிலர் டாட்டூ கலையை தொடர்ந்துள்ளனர்.

ஜிப்சி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மிகவும் சவாலானவை என்று தன்னார்வலர்கள் குறிப்பிட்டனர், ஏனெனில் அவர்கள் பார்த்த உடனேயே அவர்கள் மறைவிடங்களுக்குள் நழுவ முயன்றார்கள்.

M-RITE உடன் (வாக்சிணேசன் அப்டேக் ப்ரோமோட்டர் - VUP) சரஸ்வதி, அவர்கள் முதலில் ஜிப்சிகளை அணுக முடிவு செய்ததாகவும், நரிகுரவர் சமூகத்திற்கு தடுப்பூசி போடுவதற்கான செயல்முறையைத் தொடங்கியதாகவும் கூறினர். 

“ஆரம்பத்தில் நான் இங்கு வந்தபோது, ​​நான் புறக்கணிக்கப்பட்டேன். அசைவ உணவுகளை உண்பதாகவும், எந்த நோயையும் தாங்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் மக்கள் கூறினர். அவர்களில் சிலர் தங்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதாகக் கூறினர். நான் மீண்டும் வந்து, சிலரிடம் பேசி, தடுப்பூசியின் பலன்களைப் பற்றி அவர்களிடம் கூறி புரியவைத்தேன்,” என்றார் சரஸ்வதி.

“நான் அவர்களின் தலைவரை அணுகினேன், பின்னர் முதல் நாளிலேயே 15 பேருக்கு தடுப்பூசி போட முடிந்தது. பிறகு மீண்டும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வர ஆரம்பித்தேன். இந்தப் பகுதிக்கு அருகில் வேறு வேலைகளுக்காக நான் வரும்போதெல்லாம், இந்தக் காலனிக்குச் சென்று, அவர்களின் தடுப்பூசி நிலையைப் பற்றி மக்களிடம் விசாரிப்பேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

காலனியில் வளர்க்கப்பட்ட ராதா (வயது 48), தடுப்பூசி போடுவதில் முதலில் தயங்கியதாகவும் ஆனால் அவர்களின் தலைவர்கள் வழிகாட்டுதலுக்கு பிறகு கோவிட் -19 தடுப்பூசி எடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இனி கோவிட்-19க்கு பயப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். 

"எனது முதல் தடுப்பூசியை நான் எடுத்துக் கொள்ளும்போது எனக்கு பயம் இருந்தது, ஆனால் இரண்டாவது தடுப்பூசி போடும்பொழுது, ​​​​எனக்கு அத்தகைய எண்ணங்கள் எதுவும் இல்லை" என்று ராதா கூறினார்.

“தொலைக்காட்சி சேனல்களில், தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு மக்கள் இறந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். நடிகர் விவேக் கூட தடுப்பூசி போட்டு இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம், பணம் உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால் நம் நிலை என்னவாகும் என்று நினைத்தோம். ஆனால் தொண்டர்களும் எங்கள் தலைவரும் இந்த கோவிட்-19 தடுப்பூசிகளின் நன்மைகள் குறித்து எங்களிடம் பேசிய பிறகு, இதுபோன்ற தவறான தகவல்களை நீக்கி, நான் தடுப்பூசி போட முடிவு செய்தேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

அந்த சமூகத்தின் தலைவரும், தடுப்பூசி போட்டபின்பு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். மேலும், "நாங்கள் நிறைய பயணம் செய்கிறோம், எனவே நாங்கள் தடுப்பூசி போட வேண்டும். எங்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.

M-RITE-இன் மற்றொரு தடுப்பூசி ஊக்குவிப்பாளரான (VUP) ஏழுமலை, கல்வராயன் மலையில் வசிப்பவர்களை அணுகினார். சுமார் 171 கிராமங்கள் மற்றும் சுமார் 80,000 மக்கள்தொகை கொண்ட பழங்குடியினர் தொகுதியை அணுகிய இவர், “பழங்குடி மக்களை நம்ப வைப்பது மிகவும் கடினம். 

முதலில், நீங்கள் ஆதாரத்தைக் காட்டினாலும் அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்கள் இயற்கையான சூழலில் மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பதாகவும், அவர்களுக்கு கோவிட்-19 வராது என்றும் சொன்னார்கள். தடுப்பூசி பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க அவர்கள் எங்களைத் தங்கள் தெருக்களுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஒருசிலர் வனப்பகுதிக்குள் ஓடினர்,'' என்றார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் சில வருடங்கள் தான் வாழப் போவதாகச் சொன்னதாகவும், அதனால் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என்றும், சிலர் தங்களிடம் பணம் கேட்டதாகவும் அவர் கூறினார்.

“இந்த கிராமங்களுக்கு நாங்கள் தொடர்ந்து சென்று வருகிறோம், மேலும் கிராமத்தின் முக்கிய செல்வாக்கு நிறைந்தவருக்கு விழிப்புணர்வு அளிக்க முடிந்தது. அவர் தனது தடுப்பூசியை எடுத்து பின்னர் மற்றவர்களை சமாதானப்படுத்தியதால், இந்த கிராம மக்களுக்கு எங்களால் தடுப்பூசி போட முடிந்தது, ”என்று ஏழுமலை கூறினார்.

“நாங்கள் அவர்களை நேரில் விழிப்புணர்வு அளித்து, படிக்கத் தெரிந்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்குகினோம். ஆனால் நாம் அவர்களுக்கு எதையாவது காட்சிப்படுத்தினால், அவர்கள் விரைவில் ஈர்க்கப்படுவார்கள். எனவே, தடுப்பூசி விழிப்புணர்வை அவர்களின் நாடகத்தின் மூலம் பரப்ப சில கலைஞர்களை நாங்கள் அழைத்து வந்தோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மக்கள் வேலைக்காக, எட்டு முதல் பத்து மாதங்களுக்கு ஒருமுறை பிற மாநிலங்களுக்குச் செல்வதால், அங்குள்ள சுகாதார அதிகாரிகளால் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்கள் கேட்கப்பட்டதாகவும், அவர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்பதை புரிந்துகொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல்வாழபாடியின் முக்கிய செல்வாக்கு படைத்தவரான 47 வயதான வெள்ளி கண்ணன், சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்றபோது, ​​நிலையத்தில் அதிகாரிகள் தனது கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்களை கேட்டனர். சாத்தியின் உதவியுடன் தடுப்பூசி போடப்பட்டதால், அவரால் நிறுத்தப்படாமல் பயணம் செய்ய முடிந்தது. 

முழு தடுப்பூசி போட்டால்தான் அவர்களுக்கு வேறு மாநிலங்களில் வேலை வழங்கப்படும் என்று சக கிராம மக்கள் தெரிவித்ததாகவும், இதனால் பலரை தடுப்பூசி எடுக்க வைத்ததாகவும் கண்ணன் கூறினார்.

“தடுப்பூசி எடுத்தால் காய்ச்சலும் உடல்வலியும் வந்துவிடுமோ என்று இங்குள்ள பலர் பயப்படுகிறார்கள். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகி விடும் என்றும், தடுப்பூசி போடுபவர்கள் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னேன். இங்கு சுமார் 500 பேர் உள்ளனர், ஏறக்குறைய அனைவரும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர்,” என்றார்.

மேல்வாழப்பாடியைச் சேர்ந்த கீர்த்தி அம்மாள், தனக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதால், தடுப்பூசி எடுக்கத் தயங்குவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தன்னார்வலர்கள் தனக்குச் சொன்னதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டதாக கூறினார். அவர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டார், எங்கள் வருகையின் போது, ​​பூஸ்டர் டோஸும் அவருக்கு வழங்கப்பட்டது.

“இந்த தடுப்பூசிகளை எடுக்க பயந்து ஏதோ ஒரு மூலையில் இறந்து கிடந்தால் என்ன செய்வது? அது நடக்க நான் விரும்பவில்லை. என் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டேன்” என்று அம்மாள் கூறினார்.

இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் விழிப்புணர்வு அளிப்பதற்காக நாடகங்கள், பேச்சுகள், பிரசுரங்கள், மற்றும் ஏராளமான வழிகளில் முயற்சித்து மக்களுக்கு தேவையான தடுப்பூசியை அரசு சாரா நிறுவனங்கள் அளித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Tamil Nadu Tribal Community
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment