/indian-express-tamil/media/media_files/BUcdbMgl0RxmerLI4Axu.jpeg)
திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை அடுத்து வாகன பேரணி நடைபெற்றது.
தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, விருதுநகர், கரூர், சிதம்பரம், திருச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சியில் கண்ணப்பா உணவகம் அருகே தொடங்கிய வாகனப் பேரணியில் பங்கேற்ற அவா், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளரான ப. செந்தில்நாதனை ஆதரித்து குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வாணவேடிக்கைகள், தாரை தப்பட்டைகள் முழங்கச் சென்ற பேரணியில் பாஜக மாநில பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, அமமுகவின் சாருபாலா தொண்டைமான், அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளா் வெல்லமண்டி நடராஜன், பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா, பாஜக மாவட்டத் தலைவா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சுமாா் 1.2 கி.மீ. தூரம் சென்று நாச்சியாா்கோவில் அருகே நிறைவுற்ற வாகனப்பேரணியின்போது ஜே.பி. நட்டாவுக்கு சாலையின் இருபுறமும் அமமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டா்கள் திரளாக நின்று, வரவேற்பு அளித்தனா்.
முன்னதாக, திருச்சி காந்தி சந்தையிலிருந்து மலைக்கோட்டை வரை 1.2 கி.மீ. தொலைவு வரை செல்வதாக இருந்த ஜே.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு திருச்சி மாநகர காவல்துறையானது போக்குவரத்து நெரிசல், குடியிருப்புப் பகுதிகள், சமயபுரம் பூ செல்லும் பாதை எனக் காரணம் காட்டி, சனிக்கிழமை பிற்பகல் அனுமதி மறுத்திருந்தது. இதற்கு பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், திருச்சி பாஜக சாா்பில் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே கேட்ட பாதையை தவிா்த்து, மாற்றுப் பாதையான கண்ணப்பா உணவகம் முதல் உறையூா் சிஎஸ்ஐ மருத்துவமனை அருகே வரை மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் வாகனப் பேரணி செல்ல அனுமதி வழங்கியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.