Advertisment

அம்ருதா தொடர்ந்த வழக்கில் நான் கிளைமேக்ஸ் எழுதுகிறேன்! - நீதிபதி வைத்தியநாதன்

ஆமாம். சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள் என்பதும் கேள்விக்குறி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அம்ருதா தொடர்ந்த வழக்கில் நான் கிளைமேக்ஸ் எழுதுகிறேன்! - நீதிபதி வைத்தியநாதன்

ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்து, அவரது மகள் என்று கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அவர் சமர்பித்துள்ள ஆவணங்கள் போலியனது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்.

Advertisment

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில்

பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி தன்னுடைய வாதத்தில், என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, சந்தர்ப்ப சூழ்நிலையில் அடிப்படையில், இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும்போது, பெற்றோர் என்று நிரூபணம் ஆகவில்லை என்றால், அதனால், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது.

தீபக் தரப்பு வழக்கறிஞர்- மனுதாரர் அம்ருதாவுக்கு தற்போது 37 வயது. அவரிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் என்று ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டையை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் வழக்கறிஞர் இவர்களை பொறுத்தவரை, சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே வாரிசு. 3-வதாக பிறந்த சைலஜா என்பவரை இவர்கள் ஏற்கவில்லை. ஆனால், சந்தியாவுக்கு அவரது கணவர் இறந்த பின்னர், இந்த சைலஜா பிறந்ததால், அவரை பெங்களூரில் வைத்து வளர்த்துள்ளார்.

அரசு சார்பில் பிளீடர் வாதத்தில் - சைலஜா உயிருடன் இருந்தபோது, இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதால், அவர் மீது ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

மனுதாரர் வழக்கறிஞர்- பின்னர், அந்த வழக்கை வலியுறுத்த விரும்பவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறியதால், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடியாகி விட்டது என்று கூறப்படுகிறது. சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதனால், தனக்கு பிறந்த குழந்தையை, அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம், இந்த உண்மையை சைலஜா சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாரதி இறக்கும் தருவாயில், உண்மையை மனுதாரரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தான் ஜெயலலிதா தன் தாய் என்று அம்ருதாவுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது மனுதாரரின் பிரச்சினை இரண்டு தலைமுறைக்கு முன்பே தொடங்கி விட்டது.

ஒரு குழந்தை யாருக்கு பிறந்தது என்று அறிவியல் தான் உறுதியான முடிவை அறிவிக்கும். சட்டம் இதுபோல அறிவிக்க முடியாது. அதனால், மரபணு சோதனைக்கு உட்படுத்தினால்தான், மனுதாரர் யாருடைய மகள்? என்று தெரியவரும். அதனால், அம்ருதா, தீபா ஆகியோரது ரத்த மாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

தீபக் தரப்பு வழக்கறிஞர் - தீபக்கின் பாட்டி சந்தியா கடந்த 1971-ம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளார். அதில், சைலஜாவின் பெயரே இல்லை.

அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் - சைலஜா படித்துள்ளாரா? அவர் சந்தியாவின் மகள் என்று வெளியில் ஏன் சொல்லவில்லை?

மனுதாரர் வழக்கறிஞர் - அவர் நன்றாக படித்தவர். இந்துஸ்தான் விமான நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பல கேள்விகள் இவர்களது வாழ்க்கையில் உள்ளது.

நீதிபதி - ஆமாம். சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள் என்பதும் கேள்விக்குறி? முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் கேள்விக்குறி. எல்லாவற்றிலும் கேள்விக்குறிதான்.

மனுதாரர் வழக்கறிஞர் - அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதில் நூறு சதவீத உண்மை. எனவே மரபணு சோதனை உத்தரவிட வேண்டும். அதில் நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் - இந்த வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்து தொடரப்பட்டுள்ளது. இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி, 27-வது ‘பிலிம்பேர்’ விருது நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துக் கொண்டார். அந்த வீடியோ காட்சியை பாருங்கள். (இவ்வாறு கூறி அந்த வீடியோ காட்சியை ‘லேப்-டாப்பில்’ நீதிபதிக்கு போட்டு காட்டினார்) நிறை மாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் வழக்கு ஆகும். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது எதுவுமே உண்மை இல்லை. அனைத்து விவரங்களும் நகைச்சுவையாக உள்ளது. ஆவணங்கள் தவறானது, இறந்தவர்களை சாட்சியாக மனுதரார் கூறுகின்றார்.

1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்தாகவும், போயஸ் கார்டனில் அதிக நாட்கள் வசித்ததாகவும் மனுதாரர் கூறுகிறார். ஆனால், ஒரு புகைப்படம் கூடவா அவருடன் எடுத்திருக்கவில்லை? மேலும், 242 வினாடிகள் ஜெயலலிதாவுடன் தொலைப்பேசியில் பேசியதாக, தொலைப்பேசி ரசீதை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த போனில் ஜெயலலிதாவிடம் தான் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வாதிட்டார்.

நீதிபதி வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment