தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட 1,700 மதுக்கடைகளை மூட கோரிய வழக்கில் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31ஆம் தேதிக்குள் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் 2,800 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சண்டிகர் யூனியன் பிரதேச சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றபட்டு மதுபானக்கடைகள் திறக்கப்படுவது தொடர்பான
வழக்கில் மாநில சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில திருத்தங்கள் கொண்டு வந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தவறாக பயன்படுத்தி தமிழகத்தில் மீண்டும் 1,700 கடைகள் மாவட்ட சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றினாலும் புதிய டாஸ்மாக கடைகள் திறக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி மாவட்டசாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக் கடைகள் தொடர்பாகஉச்ச நீதிமன்ற தனது உத்தரவை தெளிவுபடுத்திய பிறகே சட்டத்திற்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. மேலும், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளாதவும் தெரிவிக்கபட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கபட்டது. இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.