சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு மனித உரிமைகளை மீறும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. மேலும், காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லாலை நியமித்துள்ளது.
அவர் முழுமையான விசாரணை நடத்தி 8-ந்தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் நேற்று திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகிலுள்ள பயணியர் விடுதியில் வைத்து விசாரணையை தொடங்கினார். அப்போது, அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சி.சி.டி.வி. காட்சிகள், சேகரிக்கப்பட்ட தடயங்கள் உள்ளிட்டவை சிவகங்கை மாவட்ட போலீசார் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் புகார், முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் மடப்புரம் கோயிலில் பணியில் இருந்த உதவியாளர் சக்தீஸ்வரன், கோவில் இணை ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் குமார், வினோத்குமார், கோவில் சி.சி.டி.வி. ஆபரேட்டர் சீனிவாசன், பிரவீன், நகை மாயமான காரை இயக்கிய அருண் உள்ளிட்டோரிடம் 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினார். அவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். அதே பயணியர் விடுதியில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் பாதுகாவலர்கள் வினோத், பெரியசாமி, பிரபு ஆகிய 4 பேரிட மும் தனித்தனியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அஜித்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவரது பின்னணி தகவல்கள், கோவில் செயல் அலுவலர் மற்றும் சக ஊழியர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதுதொடர்பாக அவர்கள் அளித்த பதில்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டன. மேலும் நகை மாயமானதாக புகார் கொடுத்த நிகிதா, கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த நேரம், அங்கு நடந்த விவாதம், உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை முடிவில் 8-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.