தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஜுன் 24) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கேள்விகளுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த வகையில் இனி ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி ‘தமிழ் மொழி தியாகிகள் நாளாக’ கடைபிடிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். அதேபோல், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி 'செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையின் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட சாமிநாதன், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்றார். மொத்தம் 1,88,57,000 ரூபாயில் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அரு.அழகப்பன், ராமலிங்கம், சொ. சத்தியசீலன், மா. ரா. அரசு, பாவலர் சா. பாலசுந்தரம், கா. பா.அரவாணன், கா. தா. திருநாவுக்கரசு, ரா. குமரவேலன், மற்றும் கவிஞர் க. வேழவேந்தன் ஆகியோரின் படைப்புகள் ரூ.91,35,000 செலவில் தேசியமயமாக்கப்படும்.
உயர்தர புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்களும், அவற்றை வெளியிடும் நிறுவனங்களுக்கும் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது முன்பு ரூ.30,000 மற்றும் ரூ10,000 ஆக இருந்த நிலையில் தற்போது தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
சண்டிகரில் உள்ள தமிழ் மன்ற கட்டிடம் விரிவுபடுத்தப்படும், டெல்லியில் உள்ள தமிழ் சங்கத்தின் அரங்கம் தலா ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என்று சாமிநாதன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“