/tamil-ie/media/media_files/uploads/2018/01/39631.jpg)
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரி, பழனியை சேர்ந்த கௌசல்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி இருவரையும் உடுமலை பேருந்து நிலையம் அருகே, ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர்பிழைத்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலஷ்மி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.
அதில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாய் அன்னலஷ்மி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தார்.
சாதி ஆணவ கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவிலேயே முதன்முறை என்பதால், நீதிபதி அலமேலு நடராஜனின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் கோவையில் மூச்சுத் திணறலால் இன்று காலை மரணமடைந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.