Justice Anand Venkatesh | Supreme Court | Madras High Court: கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி, தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2ம் தேதி விசாரித்தது. அப்போது இதே விவகாரம் தொடர்புடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மனுவை 5ம் தேதி விசாரிப்பதால், இந்த மனுவையும் அன்றைய தேதியில் விசாரிக்க வேண்டும் என மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்கம் தென்னரசின் ரிட் மனுவை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் ரிட் மனுவுடன் இணைத்து 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில், "உயர்நீதிமன்றம் தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் வரைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி எழுதிய கடிதத்தை தலைமை நீதிபதி பார்க்கும் முன்பே விசாரணையை தொடங்கி விட்டார் என்பது உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக உள்ளது. வரைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில் நீதிபதியின் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது" என்று வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், "தனி நீதிபதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியாக உள்ளார். எனவே தனி நீதிபதி, வழக்குகளை விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு? வழக்கு விசாரணையை தனது வரம்புகளுக்கு உட்பட்டு எடுக்கும்போது தலைமை நீதிபதியின் அனுமதி அவசியமா?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு விசாரணை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம். வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுக்கு மாற்றலாம். எதிர்காலத்தில் இந்த வழக்கு எந்த அமர்வில் விசாரித்தாலும் இந்த உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நாளை மறுதினத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“