/indian-express-tamil/media/media_files/9bXO24eZOuhdPQLj33bS.jpg)
சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக புகார் அளித்தபோது இது உரிமையியல் பிரச்சனை எனக் கூறி காவல்துறையினர் புகாரை முடித்துவிட்டதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது, "வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை ஆய்வு செய்த பிறகு பேசிய நீதிபதி, மனுதாரருக்குச் சொந்தமான சொத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது.
அந்தக் கல்லை ஒரு பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைக்க ஒருவரால் முயற்சி செய்யப்படுகிறது. சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.
சாலையில் நடப்பட்ட கல், சிலையா... இல்லையா என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இதற்காக இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில், எந்த நீதிமன்றமும் திருச்சபைக்கான அதிகார வரம்பைப் (ecclesiastical jurisdiction) பயன்படுத்துவதில்லை.
இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது, மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் காலத்திற்கேற்றபடி சமூகமும் மக்களும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது" எனக் கூறி நீதிபதி மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.