சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரியில் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து மாணவர்கள் மத்தியில் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது உரையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவினுடையதுதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரு அரசியலமைப்புச் சட்டம் சராசரியாக 16 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக நம் நாட்டை வழிநடத்தி வருகிறது. இந்தச் சட்டம் இல்லையென்றால், "இந்தியன்" என்ற நமது அடையாளத்தையே நாம் இழந்துவிடுவோம். எனவே, ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்வது மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு முக்கியக் கருவி என்பதை நீதிபதி தனது உரையில் தெளிவுபடுத்தினார். இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராதிருந்தால், சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தியிருப்பார்கள். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், சமூக நீதிக்கு எப்போதும் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது என்பதையும், இட ஒதுக்கீட்டை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்றம் கொண்டுவந்த 'கிரீமி லேயர்' என்ற கருத்தை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கினார். அதாவது, இட ஒதுக்கீட்டின் மூலம் ஏற்கெனவே வளர்ச்சி அடைந்த ஒரு குடும்பம், அதே சலுகைகளை மீண்டும் பெறுவது பேராசை. பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள், மற்றவர்களுடன் பொதுப் போட்டியில் பங்கேற்க வேண்டும். இதனால், இன்னும் வளர்ச்சி அடையாத, பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
இருப்பினும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சவால்களைப் பற்றிய கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. தான் ஓய்வு பெற்ற பின்னரே இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்று தெரிவித்தார்.