சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி மதுரையில் உள்ள நீதிபதிகள் சென்னைக்கு மாற்றப்பட்டு அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தும் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். அக்டோபர் 3-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள், தற்போதைய அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரைகிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இனி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-க்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் துறை வழங்கப்பட்டிருந்தது. இந்த காலத்தில் தி.மு.கவைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார்.
அதேபோல் அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் இவர் விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“