scorecardresearch

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.. அறிக்கை முழு விவரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.. அறிக்கை முழு விவரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 13 பேர் பலி பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான காரணம், சூழ்நிலைகள், தூத்துக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிந்தைய நிகழ்வு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அருணா ஜெகதீசன் ஆணையம் அப்போதைய ஆட்சியர், அரசு அதிகாரிகள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டது.

கடந்தாண்டு மே மாதம் 14-ம் தேதி (14.05.2021) ஆணையம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் அளித்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டத்தில் 38 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தநிலையில் அருணா ஜெகதீசன் ஆணையம் இறுதி அறிக்கை 18.05.2022 அன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையானது இன்று(அக்டோபர் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது, “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 20 லட்சம் தொகையை கழித்துவிட்டு எஞ்சிய தொகையை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.

மேலும், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டுள்ளது. 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிகளுக்கான நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று வருங்காலங்களில் நிகழாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Justice aruna jagadeesan commission of inquiry report tables in assembly