ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, இறைப்பற்றாளரான உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டு மனையை சமயப் பணிகளுக்கோ கோயில்களுக்கோ தானமாக அளிக்காமல் கல்விப் பணிக்காக ‘அகரம் அறக்கட்டளைக்கு’ அளித்ததைக் குறிப்பிட்டு ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது வழக்கும் விழாவில், கோயில்கள் பற்றி பேசிய வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜோதிகாவின் கருத்துக்காக சிலர் எதிராகவும் சிலர் ஆதரவாகவும் பதிவிட்டு விவாதித்ததால் இந்த விவகாராம் மேலும் சர்ச்சையானது.
இந்த நிலையில், ஜோதிகாவின் கணவர் நடிகர் சூரியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும், சூரியாவின் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் வீட்டு மனையை தானம் அளித்த உடுப்பி கோபாலகிருஷ்ணன் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “உடுப்பி கோபாலகிருஷ்ணன், அவர் ஒரு பாட்டு கற்று தரும் ஆசிரியர். சங்கீத வித்வானும் கூட. தீவிர கடவுள் நம்பிக்கையுள்ளவர்! மிகவும் கஷ்ட ஜுவனமுள்ள குடும்பத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறினார். தனது உழைப்பில் கிடைத்த பணத்தில் செங்கை மாவட்டத்தில் தனது சேமிப்பு பணத்தில் சகாய விலையில் (4) நான்கு கிரவுண்ட் வீட்டுமனை நிலத்தை 80களில் வாங்கி வைத்திருந்தார். அதன் இன்றைய சந்தை மதிப்பு 10 லட்சம் ரூபாய்.
அவர் தனது வயதான காலத்தில் தனது மகளுடன் வசிக்க பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அவர் எனது நெடுநாளைய நண்பர். என்மீது பேரன்பும், மரியாதையையும் வைத்திருப்பவர்.
ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். “எனக்கு வயதாகிவிட்டது. இறுதிகாலத்தைப்பார்த்துக்கொள்ள போதுமான சேமிப்பு வைத்திருக்கிறேன். என்னுடைய செங்கை மாவட்டத்திலுள்ள காலிமனையை
ஏதேனும் தர்ம காரியத்திற்கு கொடுக்க நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக கோவில் (அ) சமயம் சார்ந்த பணிக்கல்ல! ஏழை மக்களின் கல்விக்கு செலவிட நினைக்கிறேன்.! “உங்களது அனுபவத்தில் அப்படி கல்விப்பணி யாற்றக்கூடிய அமைப்பின் பெயரைக் கூறினால் அவர்களுக்கு தானமாக கொடுத்துவிடுவேன். எனது மனைவிக்கும் முழு சம்மதமே” என்று கூறி அவர்களையும் என்னிடம் பேசவைத்தார்.
நான் உடனே “அகரம் அறக்கட்டளை” பற்றி கூறினேன். உடனே கோபாலகிருஷ்ணன் சம்மதித்தார். தானபத்திரம் தயாரானது. நான் முதல் சாட்சி கையெழுத்திட்டேன். கொரானா காலத்திலேயே 13/03/2020 பத்திரம் பதிவிடப்பட்டது. உடல்நிலை குன்றியிருந்தபோதும் பெங்களூரிலிருந்து ரயிலில் வந்து கையெழுத்திட்டார். மூல பத்திரங்களை அகரம் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். படப்பிடிப்பிலிருந்த தம்பி சூர்யா அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். அதில் விந்தையென்னவென்றால் இதுவரை உடுப்பி கோபாலகிருஷ்ணன் சூர்யாவை படத்தில் கூட பார்த்ததில்லை. அவர் கன்னடக்காரர். வசதி அதிகமில்லை என்றாலும் பத்துலட்ச ரூபாய மதிப்புள்ள மனையை கல்விப்பணிக்காக அளித்த கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதில் நமக்கு எவ்வளவு பெருமை.
நான் ஏன் இந்த நிகழ்வை இங்கு விரிவாகப் பதிவிடுறேன் என்றால் இன்று சில சக்திகள் ஜோதிகாவிற்கெதிராக முகநூலில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மிரட்டவும் செய்கிறார்கள். அவர்கள் என்ன அப்படி தப்பான கருத்தைக் கூறிவிட்டார்கள். கோயில் உண்டிகளில் தானம் செய்வது போல் கல்விக்கும் தானமளிப்பீர் என்றுதானே?
உடுப்பி கோபாலகிருஷ்ணன் இறைப்பற்றாளர். அவர் ஜோதிகா சொன்னதை கேட்டவரில்லை. தானே முன் வந்து சமய காரியங்களுக்கு வேண்டாம்! ஏழைகளின் கல்விக்கு கொடுங்கள் என்று கூறியதோடு அவர் சக்திக்கும் அப்பாற்பட்டு பத்து லட்சம் ரூபாய்க்கு தான பத்திரம் எழுதி கொடுத்து விட்டு இரண்டாம் வகுப்பில் பெங்களூருக்கு இரவு ரயில் ஏறினாரே!
சங்கிகளே!! இந்தியாவில் இது போன்ற கோபாலகிருஷ்ணர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர். இறை பக்திமட்டுமல்ல! அவனது தரித்திர நாராயணர்களுக்கான கல்விதான் உண்மையான இறைபணி என்று அவர்களுக்குத் தெரியும்! ஜோதிகாவை நீங்கள் மிரட்டலாம்! ஆனால், உடுப்பி கோபாலகிருஷ்ணர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். இது நிச்சயம்!! இது சத்தியம்!!!” நீதிபதி சந்துரு காத்திரமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது சந்துரு திருப்புமுனை தீர்ப்புகளை அளித்தவர். ஓய்வுபெற்ற பிறகு, மக்கள் நலன் தொடர்பான சட்டப் பிரச்னைகளில் குரல் கொடுத்து வருகிறார்.