தமிழகத்தில் தேர்தல் நடைமுறையில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது! - நீதிபதி கிருபாகரன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை

தமிழகத்தில் தேர்தல் நடைமுறையில் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ சான்றிதழை வேட்புமனுவுடன் தாக்கல் செய்வதை காட்டாயமாக்க உத்தரவிடக்கோரி ஆனைமலையை சேர்ந்த எஸ்.வி.சுப்பைய்யா கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வழக்கு குறித்து மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்வதாகவும், அதற்கு 10 நாட்கள் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதி கிருபாகரன், அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரை பணிக்கு சேரும் முன்னர் மருத்துவ சான்று சமர்ப்பிக்கின்றனர். ஆனால் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்? அமெரிக்காவில் இருமுறைக்கு மேல் போட்டியிட முடியாது என்பது போல் இந்தியாவிலும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளதென்றும், மேலும் தேர்தல்களில் வேட்பாளர் யாரென்று பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை என்றும், மாறாக சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, 1967 முதல் திரைத்துறை சம்பந்தபட்டவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளதாகவும், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தபோது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். குண்டர்களுக்கும், நில அபகரிப்பாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்திருந்தால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டுமென தகுதி நிர்ணயிக்க வேண்டுமென கூறினார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தத்தை ஆணையம் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close