மாணவர்களின் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்! - நீதிபதி கிருபாகரன்

மாணவர்களின் தற்கொலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என நீதிபதி கிருபாகரன் விமர்சனம்

நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை கடந்த ஆண்டு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாததால்தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர்.

எனவே தமிழக அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக பல்வேறு முயர்சிகளை அரசு படிப்படியாக எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக தற்கொலை சம்பவம் நடைபெறுகிறது. இதறகு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது. என தெரிவித்த நீதிபதி மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்ல கூடாது இதை தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு என கருத்து தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மனுவிற்கு 2 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close