சைபர் கிரைம் பிரிவின் உள்கட்டமைப்பு வசதி, நிபுணர்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான விவரங்களை பதில்மனுவாக ஜூன் 28ம் தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சைபர் குற்றங்களால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி சைபர் கிரைம் பிரிவுக்கு நிபுணர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்டது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்தாலும் இன்னும் சம்பந்தப்பட்டவரை கண்டுபிடுக்க முடியவில்லை என குறை கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சைபர் கிரைம் பிரிவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நிபுணர்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close