ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்பு : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்று ஓய்வுபெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ரஞ்சன் கோகாய், 46-வது தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரஞ்சன் கோகாய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை, 13 மாதங்களுக்கு அவர் பதவியில் நீடிப்பார்.
கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன் தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
பின்னர், உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குரல்கொடுத்த 4 நீதிபதிகளில் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பதவியேற்ற உடனேயே அதிரடி முடிவு ஒன்றை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எடுத்துள்ளார்.
அதன்படி, இனி வழக்குகள் எதையும் உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கோரி கோரிக்கை வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன்னதாக தினமும் 20 நிமிடம் இதற்காக நேரம் செலவிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.