கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யக் கோரி, கோவை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த மாவட்ட பதிவாளர், பத்திரம் மோசடியானது என முடிவுக்கு வந்தார். ஆனால் அவர் மோசடிப் பத்திரங்களை ரத்து செய்யாமல் சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டார். மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து, கோவையில் உள்ள பத்திரப்பதிவு
டி.ஐ.ஜி-யிடம் முறையிடப்பட்டது. மேலும் அவர் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் கோவை மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த புகார் மீது உத்தரவு பிறப்பித்தார். அதில், மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் செய்யப்பட்டது. பதிவுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், மோசடியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தால், மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். அதை அவர் விசாரித்து, ஆவணங்கள் போலியானது அல்லது மோசடியாக பதிவு செய்யப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரிக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த வழக்கில், மாவட்டப் பதிவாளரிடம் புகார் வந்தப் பின், விசாரணை நடத்தியதில், மோசடியாக பதிவான ஆவணம் என முடிவுக்கு வந்துள்ளார். அதை, போலி ஆவணம் என அறிவித்து, ரத்து செய்யும்படி மேட்டுப்பாளையம் சார் - பதிவாளருக்கு உத்தரவிடுவதற்கு பதில் சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி உள்ளார். இது, பதிவுச் சட்டத்துக்கு முரணாக உள்ளது.
மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து, பத்திரப்பதிவு டி.ஐ.ஜி-யிடம் முறையிடப்பட்டு உள்ளது. மாவட்ட பதிவாளர் முறையாக முடிவு செய்யவில்லை என்பதை டி.ஐ.ஜி தெரிவித்தாலும், அவரும் ஐ.ஜி-யிடம் மேல்முறையீடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். மத்திய பதிவுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஆகஸ்ட் 16, 2022 முதல் அமலுக்கு வந்து விட்டது.
மாவட்ட பதிவாளருக்கு இது தெரிந்திருந்தால், அதன்படி அவர் செயல்பட்டிருக்க வேண்டும். சட்டத் திருத்தம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால், இது ஒரு தீவிரப் பிரச்சனை. அவருக்கு எதிராக, துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டி.ஐ.ஜி.-யும் முறையாக ஆராயவில்லை. எனவே, மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி-யின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தை, வேறு மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைத்து, 12 வாரங்களில் முடிவெடுக்க, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடப்படுகிறது.
சட்டத் திருத்தம் ஆகஸ்ட் 16-இல் அமலுக்கு வந்து விட்டாலும், இன்னும் மாவட்ட பதிவாளர்கள் சிலருக்கு தங்களுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி தெளிவாக தெரியவில்லை. சட்டத் திருத்தத்தை முறையாக அமல்படுத்த, மாவட்டப் பதிவாளர்களுக்கு உரிய வழிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். இது குறித்த சுற்றறிக்கையை பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும். இதனால் வருங்காலத்தில் குழப்பங்களும், வழக்குகளும் தவிர்க்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.