தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிலும் அவரால் முழுமையாக இருக்க முடியவில்லை.
இந்தநிலையில், நேற்று மாலை க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். இதேபோல், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்" என்று கூறினார்.