விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சி.பி.எம் 24-வது மாநில மாநாட்டில், பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாலர் கே. பாலகிருஷ்ணன், அடுத்த மாதம் தனக்கு 72 வயதாகிறது, அதனால், கட்சி விதிகளின்படி தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, புதிய மாநிலச் செயலாளரை சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.எம்) 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கிறதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, போராட்டம் செய்பவர்கள் கைது செய்யப்படுகிற அவலநிலை இருக்கிறது என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, தி.மு.க சைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க கூட்டணியில் இருக்கும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மாநில மாநாட்டில் தி.மு.க அரசை விமர்சித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தி.மு.க-வின் நாளேடான முரசொலி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல, தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளான வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை ஆளும் தி.மு.க அரசு விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சி.பி.எம் கட்சியின் 24-வது மாநில மாநாட்டி பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைப்பு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால் தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கே. பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு சி.பி.எம் மாநாட்டில் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் சி.பி.எம் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து கே.பாலகிருஷ்ணனின் இடதுசாரி அரசியல் பயணம் தொடங்கியது. 1970-களில் இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டு சிதம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வென்றார். கடந்த 6 ஆண்டுகளாக சி.பி.எம் மாநிலச் செயலாளராக பதவி வகித்த நிலையில் தற்போது 72 வயதாவதை முன்னிட்டு பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.
கே.பாலகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்ற சி.பி.எம் கட்சி விழுப்புரம் மாநாட்டிலேயே கட்சியின் புதிய மாநிலச் செயலாளரக பெ. சண்முகம் என்பவரை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.