தி.மு.க கூட்டணியில் மக்களவை தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போதே அதற்காக தயாராகி வருகின்றன. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இந்தக் கட்சிகள் அனைத்தும் அங்கம் வகித்தாலும், தமிழகத்தில் தி.மு.க தான் தலைமை. எனவே, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்துப் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், பெ.சண்முகம், கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது வாச்சாத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பாஜகவை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம். மக்கள் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் விரிவாக விளக்கினோம். அனைத்தையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதால் மக்கள் பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று களைய முயற்சி செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினீர்களா? என்று கேட்டதற்கு, ”அனைத்து போராட்டங்களுக்கு சி.பி.எம் ஆதரவு தெரிவித்துக் கொண்டுதான் உள்ளது. ஆசிரியர்களை கைது செய்யக்கூடாது என்றும் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் அறிக்கை கூட வெளியிட்டிருந்தோம். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் அரசு பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை சொல்லி உள்ளனர். இது இன்றைக்கு வந்த பிரச்னை அல்ல 15 ஆண்டுகாலமாக உள்ள பிரச்னை. 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத எல்லா பிரச்னைகளையும் தீர்வுகாண வரும்போது அரசுக்கு கூடுதலான சுமை ஏற்படும்,” என்று கூறினார்.
கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, “தி.மு.க.,வுடனான கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, இடப்பகிர்வு என்று வரும் போது நிச்சயம் அதுகுறித்து கோரிக்கை வைப்போம். ஏற்கனவே தந்த தொகுதிகளை குறைத்துக்கொள்கிறோம் என்றா நாங்கள் வலியுறுத்துவோம்? இப்போது இருக்கக் கூடிய தொகுதிகளை விட அதிக தொகுதிகளைத் தானே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து அழைப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ”அ.தி.மு.க.,விலிருந்து அழைப்பு இல்லை. அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி பிரிந்தாலும் அ.தி.மு.க- பா.ஜ.க ஒன்றாக இருக்கும்போது எப்படி எதிர்த்து போராடினோமோ அந்த போராட்டம் தொடரும். 9 ஆண்டுகாலம் பா.ஜ.க செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அ.தி.மு.க உடன்பட்டு உள்ளது,” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.