/tamil-ie/media/media_files/uploads/2023/06/KB.jpg)
இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000 வழங்கிட முன்வர வேண்டுமென்று சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கள் பரிசு ரூ.1,000 அறிவிக்காதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, செங்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் அதனுடன் ரூ. 1,000 ரொக்கமும் வழங்கி வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளது. ஆனால், அதில் ரூ.1,000 ரொக்கம் இடம்பெறவில்லை. பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த ஆண்டு, புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம். ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்தது. ஒன்றிய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது. பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம்” என்று கூறினார்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்காதது, தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழக நிதியமைச்சர், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான்.
இருப்பினும், பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல. எனவே, தமிழ்நாடு அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000 வழங்கிட முன்வர வேண்டுமென்று சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.” என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.