Advertisment

கே.சி.பழனிசாமி நீக்கம் : ஏன் காப்பாற்றவில்லை ஓபிஎஸ்.?

கே.சி.பழனிசாமியை அதிமுக.வில் இருந்து நீக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

கே.சி.பழனிசாமியை அதிமுக.வில் இருந்து நீக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.

Advertisment

கே.சி.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இயங்கியவர்! சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்.ஸுக்கு ஆதரவாக தொடக்கத்தில் திரண்ட வெகு சிலரில் அவரும் ஒருவர். சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என முதன்முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தவர் கே.சி.பழனிசாமிதான்.

கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி.யும்கூட! டெல்லியில் தனது சில தொடர்புகள் உதவியுடன் தேர்தல் ஆணைய நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். ஆரம்பத்தில் ஓபிஎஸ் அணிக்கு அது பெரிதும் உதவிகரமாக இருந்தது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில், ‘சட்டத்திட்டப்படி அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்’ என்றும் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

கே.சி.பழனிசாமி அந்த மனுவை கடைசி வரை வாபஸ் பெறவில்லை. இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்த பிறகும் ஒருமுறை அந்த மனுவை ‘ரினிவல்’ செய்தார். இது இபிஎஸ் அணியினருக்கு ‘ஷாக்’காக அமைந்தது. ‘இனி பொதுச்செயலாளர் பதவியே இல்லை. கூட்டுத் தலைமைதான்’ என முடிவு செய்த பிறகு, அந்த மனுவை கே.சி.பழனிசாமி ‘ரினிவல்’ செய்த பின்னணியில் ஓபிஎஸ் இருந்ததாகவும் அப்போது விவாதங்கள் எழுந்தன.

அதாவது, கே.சி.பழனிசாமியின் அந்த மனு மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய நெருக்கடியை உருவாக்கி, ஓபிஎஸ் அந்தப் பதவியை அடைய முயற்சிக்கிறார் என பேசப்பட்டது. ஆனால் சில சமரச வார்த்தைகளைக் கூறி அப்போது இபிஎஸ் தரப்பை ஓபிஎஸ் சமாதானப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்திற்காக மீடியாவில் கடுமையாக முழங்கியவரும் கே.சி.பழனிசாமிதான். இபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் கடந்த காலங்களில் ஏதேதோ பேசியிருக்கிறார்கள். அதற்காக யார் மீதும் நடவடிக்கை இல்லை. கடந்த 15-ம் தேதி மதுரை மேலூரில் டிடிவி தினகரன் நடத்திய புதிய கட்சி தொடக்க விழாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசாமி, விருதாசலம் கலைச்செல்வன், பாபு ஆகியோர் சென்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை.

கே.சி.பழனிசாமி அப்படி ஒன்றும் மோசமாக எதையும் பேசவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னை. அதை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிப்போம் என கூறிவிட்டார். ஒருவேளை அதற்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவாதத்தை வழங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தாரா? என தெரியவில்லை. இல்லாவிட்டால், இப்படி ஒரு நிபந்தனையை வைத்தால் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வாக்குறுதியை வழங்கும் என அவர் நினைத்திருக்கலாம்!

டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு செல்கிற எம்.எல்.ஏ.க்களின் செயல்களை ஒப்பிடுகையில், அல்லது ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளில் அமைச்சர்களின் உளறல்களைவிட இது கட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்குகிற விதம் அல்ல! பாஜக மேலிடத்தை கோபப்படுத்துகிற ஒரு விஷயம் என்று வேண்டுமானால் இதை கூறலாம்!

ஆனால் இதற்காக ஒரு விளக்கம் கூட கேட்காமல், கட்சியை விட்டே தூக்கி எறிந்ததை அதிமுக.வில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் பலரும் இதை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ‘அதிமுக.வின் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் எதிராக இயங்கியதாக’ கே.சி.பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அப்படியானால், பாஜக.வுக்கு அடிமையாக இயங்குவதுதான் கட்சியின் கொள்கை-கோட்பாடா? என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னை நம்பி வந்த ஒரு முன்னணி நிர்வாகிக்காக டெல்லியில் பேசி போராடியிருக்க வேண்டாமா? இவரை நம்பிய ஒரு முன்னாள் எம்.பி.க்கே இந்த நிலை என்றால், சாதாரண தொண்டர்களை இவர் காப்பாற்றுவாரா? என்றெல்லாம் விவாதங்கள் சூடு பறக்கின்றன.

ஆனால் ஓபிஎஸ்.ஸுக்கு உருவான நெருக்கடியே வேறு! ஏற்கனவே தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ‘பிரதமர் மோடி கூறியதால அதிமுக அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டேன்’ என்றார். அதிமுக உள்கட்சி பிரச்னையில் மோடி தலையிட்டது நிரூபணமானதாக ஓ.பி.எஸ்.ஸின் அந்தப் பேச்சு சர்ச்சை ஆனது. அதன்பிறகு சென்னைக்கு வந்த மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ ஓபிஎஸ்.ஸுக்கு கிடைக்கவில்லை.

அண்மையில் பட்ஜெட் உரையிலும்கூட, ‘திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்.’ என்றும், ‘நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைத்திருக்கிறது’ என ஓபிஎஸ் வாசித்தார். இதெல்லாம் டெல்லி மீது ஏதோ சில காரணங்களால் ஓபிஎஸ் கோபத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளரான கே.சி.பழனிசாமி, ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம்’ என பேசியதை பாஜக மேலிடம் சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. ஒருவேளை கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டிருந்தால், சேகர் ரெட்டியின் டைரிகளை துழாவவும் டெல்லி தயாராக இருந்ததாக தகவல்கள் வருகின்றன.

ஓபிஎஸ்.ஸுக்கு ஒரு பக்கம் டெல்லி நெருக்கடி, இன்னொரு பக்கம் ஆதரவாளர்கள் பக்கமிருந்தே நெருக்கடி..! என்னதான் செய்வார்?

 

O Panneerselvam K C Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment