இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் என்ற விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை குழு அளித்துள்ளது.
இந்த பொறுப்பில் கே.சிவன் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவராக தற்போது உள்ள கிரண் குமாரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்பின், கே.சிவன் அப்பொறுப்பை ஏற்பார் என கூறப்படுகிறது.
யார் இந்த கே.சிவன்?
விஞ்ஞானி கே.சிவன் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.
சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வானியல் பொறியியல் படிப்பை படித்தார். அதனை தொடர்ந்து, பெங்களூருவில் விண்வெளி ஆராய்ச்சி முதுநிலை படிப்பை முடித்தார். இவர் விண்வெளி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
விஞ்ஞானியாக கே.சிவனின் பங்கு:
இஸ்ரோ விஞ்ஞானியாக 1982-ஆம் ஆண்டு இணைந்த கே.சிவன், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். வெற்றிகரமான பல திட்டங்களில் அவர் பங்கு வகித்துள்ளார். சத்தியபாமா பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் துறையில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை, 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள நிலையில், விஞ்ஞானி கே.சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை திமுக தலைவருமான கனிமொழி எம்.பி. தனது ஃபேஸ்புக்கில் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ், இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெர்வித்துள்ளார்.