திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வருகிற 24-ம் தேதி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலேசிய சுற்றுப் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இதற்கான அழைப்பிதழ் வெளியானது. வருகிற 24-ம் தேதி மலேசியாவில் பெரியார் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டதையொட்டி இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும், அதன் தாக்கமும்’ என்கிற தலைப்பில் கி.வீரமணி பேசுவதாக ஏற்பாடு.

மலேசியாவில் இந்திய தூதரகத்துடன் இணைந்த இந்தியா- மலேசியா பாரம்பரிய குழு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலாச்சார மையம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. ஆனால் இந்துக் கடவுள்கள் குறித்து கி.வீரமணி பேசிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மலேசிய இந்து தர்ம மாமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தன.
பல்வேறு மத்தத்தினரும் இணக்கமாக வாழும் மலேசியாவில் கி.வீரமணியின் நிகழ்ச்சி பிரச்னையை உருவாக்கும் என மேற்படி அமைப்பினர் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் மலேசிய அரசுத் தரப்பில் கேட்டுக்கொண்டதாகவும், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம்
எனினும் மலேசிய தூதரகம் தரப்பிலோ, திராவிடர் கழகம் சார்பிலோ அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள திராவிட இயக்க ஆர்வலர்கள் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.