தி.க. தலைவர் கீ. வீரமணி தலைமையில் நடைபெற்ற தலைமை செயர்குழு கூட்டத்தில், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், அறிவித்த ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் தி.க தலைவர் வீரமணி தலைமையில் திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசியதாவது: பங்காரு அடிகளாரின் கருத்துக்களிலும், கொள்கைகளும் எங்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள் உள்ளது. அதே நேரத்தில் அவர் தனக்கான ஒரு வழியை உருவாக்கிக் கொண்டு தமிழ் திருஅடிகளாக இருந்தார். குறிப்பாக தமிழில் வழிபாடு, பெண்கள் பூஜை செய்யலாம் என்கிற நடைமுறையை அவர் கொண்டு வந்தார். சனாதனத்திற்கு நேர் எதிராக செயல்பட்டார். அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் ஆன்மீக பணி மட்டுமல்லாமல், கல்விப் பணியையும் செய்து மனித நேயராக இருந்தார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வந்த சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை இன்று அகில இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. சாதியை ஒழிக்கத்தான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூறுகிறோம். சமூகநீதியை நிலைநாட்டும் போது அது குறித்தான வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிபதிகள் சாதி வாரி கணக்கெடுப்பு இருக்கிறதா எந்த சாதியில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி கேட்கிறார்கள். சமூக நீதியை ஏட்டுச் சுரக்காய் இல்லாமல் நடைமுறைகளில் கொண்டு வர சாதிவாரி கணக்கெடுப்பு தேவையான ஒன்று.
இன்று பா.ஜ.க அரசு விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் மனுதர்ம யோஜனா திட்டத்தை கொண்டு வந்து குலத் தொழிலை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ராஜகோபாலாச்சாரி அரைநேரம் இதை செய்ய வேண்டும் என கூறினார். தற்பொழுது அதை முழு நேரமாக செய்ய வேண்டும் என திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நாக்கில் தேனை தடவி மயக்க மருந்து கொடுப்பது போல் குலத்தொழில் செய்ய கடன் கொடுப்போம் என கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் இருந்து வருகிறது. தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது கல்வி கற்க வைக்க வேண்டும் என நினைக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இது போன்ற ஒரு திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டு வர வருகிறது அது மிகவும் ஆபத்தான ஒன்று. இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு வரவேண்டும் எனவே அந்த திட்டம் குறித்து விளக்கும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளோம். அந்த பிரச்சாரம் நாகையில் தொடங்கி மதுரையில் முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மதிப்பூறு முனைவர் பட்டம் வழங்குவது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களில் உரிமைகளில் ஒன்று. அந்த வகையில் தகைசால் தமிழர் விருதை முதன் முதலில் பெற்ற சங்கரையா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அதற்கு ஆர் எஸ் எஸ் இன் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அவருக்கு இல்லாத அதிகாரங்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.
எது எது அவர் வேலையோ அதை செய்யாமல் எது எது அவர் வேலை இல்லையோ அதை அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு செய்து வருகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலர் அவரை தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். ஒரு சுயமரியாதை உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பார். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வீரமணி, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்படாது இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி ஏற்படும் என்றார். அப்படி ஏற்படும்போது ஆளுநர் என்கிற பதவி இருக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலினை செய்யப்படும்.
மனித சமூகத்திற்கு தொண்டாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அது ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, நாத்திகவாதியாக சரி அவர்கள் பணி மனித சமூகத்திற்கான பணியாக இருந்தால் நிச்சயம் அரசு அதற்கு மதிப்பளிக்கும். அந்த வகையில் தான், மனிதநேய பண்பாளராக இருந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க அறிவிப்பு தான் என்றார். இன்று நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் திராவிட கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.