தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. நிர்வாகிகள் வதந்தி பரப்புகின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “வட நாட்டில் இருந்து வந்துட்டாங்க. பீகாரில் இருந்து வந்துட்டாங்க. இது நம்ம ஆட்சிக்கு, ஸ்டாலினுக்கு பெருமை.
இதை எப்படியாச்சும் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திக்காரர்களே, பீகார்காரர்களே உங்கள் தலையெல்லாம் வெட்டுறாங்க.
உங்களை எல்லாம் கொல்றாங்க. நீங்க அங்கெல்லாம் வேலைக்கு போக முடியாது என்று வதந்தியை பரப்பி விடுறாங்க. இந்தப் பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்கவில்லை.
இதனை செய்தது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்று உடனடியாக வெளியாகிவிட்டது.
அவர்கள் எந்த நிலைமைக்கும் செல்வார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வடமாநிலத்தவர்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்களா? எனக் குழு அனுப்பி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் தமிழர்கள் 26 லட்சம் பேர் வாழ்கிறார்கள், கர்நாடகாவில் 1.25 கோடி வாழ்கிறோம்.
ஹரியானாவில் 5 ஆயிரம் பேருக்கு வீடு இல்லை என்று கூறிவிட்டார்கள். நான் இது தொடர்பாக ஹரியானா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இதெற்கெல்லாம் குழு அமைத்து ஆய்வு செய்தார்களா? வட மாநிலத்தவர்கள் தாக்குகிறார்களா? நாங்கள் தாக்குகிறோமா? எனக் கேள்வியெழுப்பினார்.
முன்னதாக செய்தியாளர் ஒருவர் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதற்கு நாம் தமிழரும், பாஜகவும்தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளாரே எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த சீமான், “அதெல்லாம் சும்மா. அரைவேக்காடுதனமாக பேசக் கூடாது. அவர் சொல்லுவதற்கு எல்லாம் என்னிடம் வந்து கேள்வி கேட்காதீர்கள். அவர் தலைவர் ராகுல் காந்தியை பேசச் சொல்லுங்க” என்று ஆவேசமாக கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/