திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஆளுனராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (Article) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி நாளும் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட வரைவுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும், அல்லது முறைப்படி திருப்பி அனுப்பாமலும் காலந்தாழ்த்தி மக்கள் அரசான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைச் செயல்படாமல் செய்ய திட்டமிட்ட சண்டித்தனத்தைச் செய்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
பல்கலைக் கழக விதிமுறைகளை மாற்றச் சொல்லி அழுத்தம் - இப்படி பல! இதற்கிடையில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்து காவல்துறை விசாரணையில் அதற்கு முகாந்தரம் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகும்கூட, அவர்கள்மீது ஊழலுக்கான வழக்குத் தாக்கலாக அனுமதி அளிக்க இந்த ஆளுநர் ஆர்.என். ரவி தயக்கம் காட்டி தனது வழக்கமான “தாமதப் பெட்டி”க்குள் போட்டு வைத்துள்ளார்.
ஊழலைச் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள கோப்புகள் மேல் நடவடிக்கைக்கான அனுமதி அளிக்காது கிடப்பில் வைத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அறவழியில் நடந்து வரும் நிலையில் “எதன் மீதோ மழை பொழிந்தது” என்பதைப் போல ராஜ்பவனத்தில் இருப்பது மகா வெட்கக் கேடு. வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஒரு மாபெரும் போராட்டம் “பேருரு” எடுப்பது உறுதி!
மக்கள் நினைத்தால் மாற்றங்கள் தானே வரும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“