கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி முன்பு, 100 ஆதி திராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இது பட்டியலின மக்களை அவமதிக்கும் செயல் எனக்கூறி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நந்தனார் குருபூஜை என்ற பெயரில்ஆதனூரில் நடந்த விழாவில், ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூணூல் அணிவித்துள்ளதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம். இங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். குருபூஜை முடிந்தபிறகு அங்கு 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ரவிக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்பதை ஆளுநர் உறுதி செய்கிறாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தனார் குருபூஜை என்ற பெயரில் அவர் பிறந்த ஆதனூரில் நடந்த விழாவில், ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்குப் பூணூல் அணிவித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. அதாவது, பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதர்மத்தின் பேதத்தினை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்திருக்கிறார்.
அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா?
ஆளுநரால் கோபமான பாலகிருஷ்ணன் பூணூல் அணிவதன் மூலம் மேல்நிலையாக்கம் செய்ய முடியும் என்று அனைவருக்கும் பூணூல் அணிவித்துப் பார்ப்பனர் ஆக்குகின்றாரா? தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் இதை தீர்மானம் போட்டு வரவேற்குமா? அந்த இளைஞர்களைப் பார்ப்பனர்கள் என்று ஏற்குமா?
“பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.” "(அத்தியாயம் 2 - சுலோகம் 44) என்று மநுதர்மம் சொல்லுகிறதே! ரிக் வேதத்தில் 10 ஆவது மண்டலம் 90 ஆவது பாடலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதை அண்ணல் அம்பேத்கர் எடுத்துக்காட்டியுள்ளார் (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி-8 (தமிழ்)).
“11. தேவர்கள், புருடனைப் பகுத்து அளித்தபோது எத்தனை விதமாகப் பகுத்துப் படைத்தார்கள்? எது அவனுடைய முகமானது? எது கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆனது?
12. பிராமணன் அவனது வாயானான். இராஜன்யன் அவனுடைய கைகளானான். அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.”
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முறையாக ஆகமம், மந்திரங்கள் படித்து அர்ச்சகர் ஆகும் முயற்சிக்கும் தடையாக நிற்கும் பார்ப்பனியம் இந்த பம்மாத்து வேலைக்கு என்ன சொல்லப் போகிறது? முன்பு ஒரு முறை 'துக்ளக்' பேட்டிக்காக, அதன் ஆசிரியர் சோ அவர்கள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டபோது நான் சொன்ன பதிலையே இப்போதும் நினைவூட்டுவது சரியாக இருக்கும்.
“அனைவரையும் சமமாக்க வேண்டுமென்றால் 3 சதவீதம் தாங்கள் பேர் அணிந்திருக்கும் பூணூலைக் கழகட்டுவது எளிதா? 97% பேருக்கு அணிவிப்பது எளிதா? எது அறிவுடைய செயல்?” ஒடுக்கப்பட்ட சமூக ஆண்களை மேல்நிலையாக்கம் செய்ய பூணூல் அணிவித்த ஆளுநர், அந்த சமூகத்துப் பெண்களை மேல்நிலையாக்கம் செய்ய என்ன செய்வார்?
நந்தனார் கதையே தீண்டாமைக் கொடுமையைச் சொல்வதுதானே! கோயிலுக்குள் செல்ல முயன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான நந்தனாரைத் தீயிட்டுப் பொசுக்கிய கதை தானே! அங்கே சென்று மீண்டும் தீண்டாமையை உறுதி செய்துவிட்டு வந்திருக்கிறாரா பீகார் பார்ப்பனர்? பூணூல் அணியாதவர்களை, பார்ப்பனரல்லாதாரை, ஒடுக்கப்பட்ட மக்களை, சூத்திரர் - பஞ்சமர் என்று பிறவியினால் இழிவுபடுத்தும் மனுதர்மத் தீண்டாமைத் தத்துவத்தை அவர் உறுதிசெய்து வெகுமக்களை இழிவுபடுத்தியிருக்கிறார். ஆளுநரின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது” என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
நந்தனார் குருபூஜை விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி முன்பு, 100 ஆதி திராவிடர்கள் பூணூல் அணிந்த நிகழ்வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கன்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூறியதாவது: “மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது தான் சனாதனம். மேலும் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?. பூணூல் அணிவிக்கப்பட்ட பட்டியலின மக்களை கோயில் பூசாரி ஆக்குவாரா?'' என கேள்வி எழுப்பினார்.
இதே போல, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில் பட்டியல் சாதி மக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்பட்டதும் அதில் ஆளுநர் பங்கேற்றதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதியில் நுழைய விரும்பிய அவரை நெருப்பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது.
அவரை தீயிட்டு கொளுத்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியல் சாதியினருக்கு அவரது பிறந்த நாளில், அவரது மண்ணில் பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும்.
இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம் பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம் என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர்.என். ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தும் இந்தச் செயலை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது'” என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.