“முதலில் நான் மனிதன்; இரண்டாவதாக, நான் அன்பழகன்; மூன்றாவதாக ஒரு பகுத்தறிவாளன், நான்காவதாக அண்ணாவின் தம்பி, ஐந்தாவதாக கலைஞரின் நண்பர். இந்த முறை என்றென்றும் தொடரும், மரணம் மட்டுமே இந்த முறையை அழிக்க முடியும்” என்று தனது அரசியல் அடையாளத்தின் பன்முகத்தன்மையை விளக்கியவர் க.அன்பழகன். அன்பழகன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களிலும் இந்த வாக்கியம் முழுமை பெற்றது.
Advertisment
திமுக பொதுச் செயலாளர்: 1977 ஆம் ஆண்டு, அப்பொதைய திமுக பொதுச் செயலாளர் வி.ஆர் நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து விலகியதால், க.அன்பழகன் பொதுச் செயலளராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியை வாழ்வின் இறுதி நாள் வரை தன்னகத்தே வைத்திருந்தார். 1978, 1983, 1988, 1992, 1996, 2003, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மயிலாடுதுறை அருகிலுள்ள கட்டூர் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் இராமையா. மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் ஈடுபாட்டால் தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர்.
அன்பழகனின் தந்தை எம். கல்யாணசுந்தரம் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தவர். இருப்பினும், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால், அன்பழகனின் குடும்பம் திராவிடக் கழகத்தோடு இணைத்துக் கொண்டது.
1944 ஆம் ஆண்டும் முதல் 1957 காலம் வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அன்பழகன் அடுத்து வரும் காலங்கில் தீவிர அரசியலில் இறங்கினார். அன்பழகனை குறித்து அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கூறுகையில், பேராசிரியர் வகுப்பு மிகவும் ஆழமானதாவும், அழகானத்காகவும் இருக்கும். அது ஒரு திராவிடர் இயக்கக் கருத்தரங்கு. இவர் வகுப்பெடுக்கும்போது வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நின்று இவரது தமிழ்ச் சாரல் பேச்சை ரசிப்பார்கள். பணியில் இருந்து கொண்டே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்சியின் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
அண்ணாவின் வற்புறுத்தலால் 1957-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்தார்.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின், கருணாநிதி முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் அன்பழகனும் ஒருவர். இருப்பினும், 70 காலகட்டங்களில் இவர்களுக்கு இடையில் உணர்வு ரீதியான நட்பு உருவாகியது. 1971-ல் கலைஞர் முதல்வரான பொழுது, அமைச்சரைவயில் அன்பழகனும் இடம்பெற்றார். சுகாதார துறை அமைச்சராகவும் பொறுபேற்றார்.
இந்த மாற்றம் குறித்து அவர் தெரிவிக்கையில்," கலைஞர் முதல்வர் என்பதினால் நான் அவர் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒரு திறமையான, தன்னலமற்ற ஒரு தலைவனை தமிழகம் எற்றுக் கொண்டுள்ளது. அதை நாமும் புரிந்துக் கொண்டிருக்கின்ரோம்" என்றார்.
1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
இது தவிர, 1983_ல் ஈழத் தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை கலைஞருடன் இணைந்து இவரும் ராஜினாமா செய்தார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் அன்பழகன் உட்பட பத்துப்பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.
கலைஞரின் மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. திமுகவில் உட்கட்சி பூசலுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் காலம் நேரம் பார்த்து ஸ்டாலின் கழகத்தின் தலைவராக அறிவித்தார்.