/indian-express-tamil/media/media_files/2025/09/05/ka-sengottaiyan-aiadmk-press-meet-edappadi-k-palaniswami-10-days-time-tamil-news-2025-09-05-11-13-28.jpg)
கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார்.
அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் முன்னணி முகமாக திகழும் அவருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காவில்லை.
இது பற்றி கேள்வி எழுப்பட்டபோது, 'என்னை சோதிக்காதீர்கள், கட்சி ஒற்றுமையகா இருக்க பாடுபட்டவன்' என்று கூறினார். பின்னர், செங்கோட்டையன் பங்கேற்ற அ.தி.மு.க நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட மோதல் அ.தி.மு.க-வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுவதாக பேசப்பட்டது.
கட்சியின் முக்கிய முடிவுகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அவரை படிப்படியாக ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையன் தான் மனம் திறந்து பேச உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணி அளவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது செங்கோட்டையன் பேசுகையில், "அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். மேலும், பிரிந்து சென்றவர்களை இணைக்கவிட்டால் ஒருங்கிணைப்பு பணிகளை தாங்களே மேற்கொள்போவதாகவும், பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசியதாவது:-
அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார்.
கோவையில் நடந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் எம்.ஜி.ஆர் என்னை மனதார பாராட்டினார். கோபிசெட்டிபாளையத்திற்கு பதில் சத்தியமங்கலத்தில் போட்டியிட எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார். ஆன்மீகவாதிகளும் திராவிட தலைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமை ஜெயலலிதா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைந்தபிறகு, அ.தி.மு.க-விற்கு பல்வேறு சோதனைகள் வந்தன; இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. அ.தி.மு.க உடைந்துவிடக்கூடாது என்பதால் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன்.
முன்னாள் முதல்மைச்சர் தற்போதைய எதிர்க் கட்சிதலைவரை சசிகலா முதலமைச்சராக முன்மொழிந்தார். 2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது. 2024-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும். எனக்கு நெருங்கிய நண்பர்களை கலந்து கொண்டு அடுத்தகட்ட முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.