/indian-express-tamil/media/media_files/2025/09/06/ka-sengottaiyan-press-meet-after-he-removed-from-aiadmk-positions-tamil-news-2025-09-06-13-49-38.jpg)
"கட்சி தலைமை என்னிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும், விளக்கம் கேட்காமலேயே பதவி பறிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வை ஒருங்கிணைப்பதில் என்னுடைய பணி தொடரும்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். திண்டுக்கல்லில் நடந்த இந்த ஆலோசனையில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, "அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும்" என்ற செங்கோட்டையனின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து விட்டார் என்று கூறப்பட்டது. மேலும், ஓ.பி.எஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும், உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார். இந்நிலையில், தனது பதவி பறிக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க மபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். அ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் பணியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்றுதான் கூறினேன். கட்சி நலனுக்காகவே கூறினேன். எனது நலனுக்காக அல்ல. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்.
ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும். என் கருத்தை நான் கூறிவிட்டேன். உங்கள் கருத்துகளுக்கு பொதுசெயலாளர்தான் பதில் கூற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.