/indian-express-tamil/media/media_files/2025/09/06/ka-sengottaiyan-removed-aiadmk-edappadi-k-palaniswami-announce-tamil-news-2025-09-06-12-39-22.jpg)
அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது பற்றி கேள்வி எழுப்பட்டபோது, 'என்னை சோதிக்காதீர்கள், கட்சி ஒற்றுமையகா இருக்க பாடுபட்டவன்' என்று கூறினார்.
இதன்பின்னர், செங்கோட்டையன் பங்கேற்ற அ.தி.மு.க நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட மோதல் அ.தி.மு.க-வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுவதாக பேசப்பட்டது. கட்சியின் முக்கிய முடிவுகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அவரை படிப்படியாக ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, செங்கோட்டையன் செப்டம்பர் 5 அன்று, தான் மனம் திறந்து பேச உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், 'அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்." என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன், அப்படி செய்யாவிட்டால் ஒருங்கிணைப்பு பணிகளை தாங்களே மேற்கொள்போவதாகவும், பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு ஓ.பன்னீர் செல்வம், வி.கே சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், செங்கோட்டையன் பேச்சு குறித்து அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். திண்டுக்கல்லில் நடந்த இந்த ஆலோசனையில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் "அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும்" என்ற செங்கோட்டையனின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து விட்டார் என்றும், ஓ.பி.எஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும், உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/BgB5kMOnpH
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 6, 2025
இந்த நிலையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர் வகித்து வந்த அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு pic.twitter.com/0LXwIbepjB
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 6, 2025
செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய பொறுப்பளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏ,,( கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.