இன்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். ஆனால், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சபாநாயகர் மு.அப்பாவு தொடர்ந்து பேச அனுமதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி அளிக்கக்கோரி, அ.தி.மு.க-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அ.தி.மு.க-வினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அதேநேரத்தில், அ.தி.மு.க உறுப்பினரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார். வெளிநடப்பு செய்தபோது, அ.தி.மு.க-வினருடன் சேர்ந்து சென்ற ஒருசில நொடிகளில் செங்கோட்டையன் மீண்டும் அவைக்குள் திரும்பினார். அவர், கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.
மேலும் சட்டையில் அணிந்திருந்த பேட்ஜை அகற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால், பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு செங்கோட்டையன் பேசினார். முன்னதாக அனைவரும் பதாகையை ஏந்தியபோது, தன்னிடம் கொடுக்கப்பட்ட பதாகையை வாங்கவும் செங்கோட்டையன் மறுத்ததாக கூறப்படுகிறது.