Kaala Movie Release : நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இப்படத்தில் வெளியீட்டை ரசிகர்கள் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாகக் கபாலி படத்திற்கு ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்கள், இந்த முறையும் காலா படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளனர்.
காலா படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியுள்ளார், தனுஷ் தயாரித்துள்ளார் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினியின் மாஸ் ஒரு பக்கம், இரஞ்சித் பேசும் நில அரசியல் ஒரு பக்கம் என இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் காலா படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர், தமிழ் ராக்கர்ஸ்.
இணையத்தளத்தில் புதிய படங்களை உடனடியாக ரிலீஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தமிழ் ராக்கர்ஸ். எந்தப் படம் வெளியானாலும் அதனை உடனடியாக இணையத்தளத்தில் வெளியிட இவர்களுக்கென்று ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான காலா திரைப்படத்தையும் இவர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தச் செயல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கபாலி படம் வெளியானபோது, படக்குழுவுக்கும் இவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் கபாலி படத்தை நிச்சயம் திருடி இணையத்தில் ரிலீஸ் செய்ய முடியாது என்று படக்குழுவினர் கூறினர். ஆனால் அவர்களுக்குச் சவால் அளிக்கும் வகையில், படத்தின் முதல் சில மணி நேரக் காட்சிகளை வெளியீட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தனர்.
இதே வேலையை தற்போது காலா படத்திற்கும் அவர்கள் செய்துள்ளனர். ஒரு முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் அவர்களின் இணையத்தில் வெளியிட்டிருப்பதைப் பலரும் கண்டித்து வருகின்றனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படத்தை பிரவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதாகத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் லைவ் வீடியோ செய்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.