காலா... ரஜினிகாந்த் அரசியல்: மோடி-புரோஹித் சந்திப்பு பின்னணி இதுதானா?

ரஜினிகாந்த்-ன் காலா வெளியாகிற நாளில் பிரதமர் நரேந்திர மோடி-பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு நடந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது.

காலா படம் வெளியான நாளில், சரியாக தமிழ்நாடு ஆளுனர் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது இயல்பானதுதானா?

காலா, ரஜினிகாந்த்-ன் அரசியலுக்கு ஆரவாரமாக கால்கோள் நடத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து படத்திற்கு கிடைத்து வரும் ரிவ்வியூ ரெஸ்பான்ஸால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் தருணமாக இதை ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவரை அரசியல் சுழலுக்குள் வலுவாகவே இழுத்து விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிற சூழலில் கட்சி ஆரம்பித்து, அந்த வேகத்தில் தேர்தலை எதிர்கொள்வதுதான் ரஜினி ஆரம்பத்திலேயே எடுத்த முடிவு. இன்னமும் அவர் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறார்.

ரஜினிகாந்தின் சில கருத்துகளுக்கு தமிழ்நாடு பாஜக உறுதுணையாக இருந்தபோதும், பாஜக.வுடன் கூட்டணி இல்லை என்பதை தனது மன்றத்தினர் மத்தியில் ரஜினி தெளிவாக கூறியிருக்கிறார். காலா காட்சிகளும் கொள்கை அளவில் பாஜக தேசிய தலைமைக்கு உவப்பானதாக இல்லை. குறிப்பாக ராமரை, ராவணன் தோற்கடிப்பதாக வருகிற திராவிட அரசியலை பாஜக ஏற்காது.

ஆனாலும் நிஜ அரசியலில் ரஜினிகாந்த் தங்களுக்கு உடன்பாடான ஆன்மீக அரசியலை முன்னெடுப்பவர் என்கிற கருத்தும் பாஜக தலைவர்களிடம் இருக்கிறது. எனவே ரஜினிகாந்த்-ன் எதிர்பார்ப்பான சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே கொண்டு வருவதற்கான வழி வகைகளை பாஜக தேசிய தலைமையும் ஆராயும் என கூறப்படுகிறது.

குறிப்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து காட்சிகள் மாறும். சிக்கலான அது போன்ற சுழலில் ஆளுனரின் அரசியல் அமைப்பு சட்ட நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.

இந்தப் பின்னணியில்தான் ஆளுனர்கள் மாநாட்டுக்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கூடுதலாக 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுனர் இன்று (ஜூன் 7) பிரதமர் இல்லத்தில் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறது. ரஜினிகாந்த்-ன் காலா வெளியாகிற நாளில் பிரதமர் நரேந்திர மோடி-பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு நடந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 9 மாதங்களில் தமிழ்நாடு ஆளுனர் சந்திப்பது இது 3-வது முறை ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் சந்தித்து ஓகி புயல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பன்வாரிலால் புரோஹித் பேசினார். அதன்பிறகு காவிரி போராட்டம் உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடியை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

இன்று நடந்த சந்திப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தாண்டி காலா, ரஜினியின் அரசியல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு உள்ளிட்ட அம்சங்களும் பேச்சில் இடம்பெற்றதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ரஜினிகாந்துக்கு தேர்தல் பாதையை தயார் செய்து கொடுத்து, தங்களின் அரசியல் பாதையை தமிழகத்தில் வலுப்படுத்த பாஜக திட்டமிடுவதாகவே தகவல்!

 

×Close
×Close