கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயமானது தொடர்பான புகாரில் டி.வி.எஸ். நிறுவன தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்கள் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையதினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம், கர்நாடகா கேரளாவில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த பணத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த திருப்பணி குழுவில் மற்றொரு உறுப்பினரான அப்பல்லோ குழும தலைவரும் இருந்ததாகவும், அவர் மேற்பார்வையிலேயே திருப்பணிகள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையிலும், 2015 ம் ஆண்டு நடந்த கும்பாபிேஷகத்தின் போது திருப்பணிக்குழு தலைவர் என்ற முறையிலும், 25 கோடி ரூபாய்க்கு சொந்தபணத்தில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி, புணரமைப்பு தொடர்பான வழக்கில் தன்னை காவல் துறையினர் சேர்த்துள்ளதாக யானை ராஜேந்திரன் வழக்கில் தெரிவித்துள்ளதாலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்யக் கூடும் என்பதாலும் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் சிலை காணாமல் போனது தொடர்பாக 6 வாரத்தில் விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் இன்று, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் காவலர்கள் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆறு வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என உத்தரவாதம் அளித்தனர்.
இதனையடுத்து வழக்கறிஞர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உத்தரவாத்த்தை அடுத்து வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 6 வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.