திமுகவை எதிர்ப்பதற்காக எல்லா கசப்பான நிகழ்வுகளை மறந்து அமமுகவுடன் இணையுங்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியதற்கு கடம்பூ ராஜூ பதிலளித்துள்ளார்.
2019ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நேரத்தில், கூட்டணிகள் மற்றும் கட்சி இணைப்புகளுக்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அமமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கட்சியில் இணையும்படி மறைமுகமாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தங்க தமிழ்செல்வன் vs கடம்பூர் ராஜூ
இந்நிலையில், நெல்லையில் இன்று பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க இணைந்து தான் ஜெயிக்க முடியும் என்ற நோக்கில் இரு கட்சிகளையும் இணைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்தால் நல்லது தான். அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய இரு கட்சிகளும் வேறல்ல என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் தனியார் தொலைக்காட்விக்கு பேட்டியளித்த அவர், “ஓ. பன்னீர்செல்வம் இந்த கட்சி ஊழல் ஆட்சி என்று 11 எல்.எல்.ஏக்களுடன் வெளியேறி அதிமுகவை முடக்கியது அவர். ஆனால் அவரை துணை முதல்வராக்கி அழகு பார்க்கிறீர்கள். எந்த தவறும் செய்யாத 18 எம்.எல்.ஏக்களை நீக்கிட்டு இப்போது இரண்டு பேரும் சேர வேண்டும் என்றால் என்ன அர்த்தம். சேர்வோம் ஆனால் திருந்தி வாருங்கள். உங்களிடம் மக்கள் செல்வாக்கும் இல்லை தொண்டர்கள் செல்வாக்கும் இல்லை. இதனை மத்திய அரசே புரிந்துக் கொண்டது உளவுத் துறையும் அதை தான் கூறுகிறது. விட்டுக்கொடுத்து வந்தால் இரண்டு கட்சிகளும் இணைவோம். இணைந்தால் பலம் நமக்கு தானே. ஏன் எதிரிகளுக்கு இடம் கொடுக்குறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ, “அதிமுக என்பது, திமுக கருணாநிதி தீய சக்தி என்று வர்ணித்து தொடங்கப்பட்ட கழகம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் யாருடைய துணையுமின்றி திமுக-வை எதிர்த்த வலிமை அதிமுகவுக்கு உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏற்கனவே அறிவித்தது போல் பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்ந்தால் அவர்களை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.