Kadar tribes : கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அமைந்துள்ளது தாய்முடி தேயிலை தோட்டம். 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, தங்களின் வாழ்விடங்களை இழந்த காடர் பழங்குடியினர் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். போதுமான அடிப்படை வசதி ஏதும் இன்றி இருக்கும் அப்பகுதியில் இருந்து விரைவாக தங்களின் சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று பல மாதங்களாக விருப்பம் தெரிவித்து வந்தனர் காடர் பழங்குடியினர். ஆனாலும் பல்வேறு காரணங்களை காட்டி, அவர்களை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தங்க வைத்துள்ளனர் வனத்துறையினர்.’
வால்பாறை, இடைமலை ஆற்றிற்கு மேற்பகுதியில் அமைந்துள்ளது கல்லார் பழங்குடியினர் கிராமம். 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருமழை, பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே வாழ ஏற்ற சூழல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. 2019ம் ஆண்டு, உயிர் பாதுகாப்பிற்காக தாய்முடி வருகின்ற வழியில் தங்களின் குடியிருப்பை மாற்றி அமைத்தனர். நான்கு நாட்கள் கழித்து வனத்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்க வைத்தனர். அவர்களுக்கு விரைவில், வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆன நிலையிலும் சுகாதாரமான கழிவறைகள், குடிநீர் வசதி ஏதுமற்ற அவ்வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தங்களின் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு முன்னெடுப்புகளை பழங்குடியினர் மேற்கொண்டும் அதற்கான பலன் ஏதும் கிடைக்கவில்லை. தங்களுக்கு தேவையான வாழிடத்தை உருவாக்க 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று, அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த தெப்பக்குள மேட்டில் தெய்வ வழிபாடு மேற்கொண்டு அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து தெப்பக்குள மேட்டில் குடியிருப்பு பகுதியை ஏற்படுத்த அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து குடிசைகளை அமைத்தனர். பின்பு நில அளவை செய்யும் பணிகளும் நிறைவுற்றது.
நில அளவை செய்து ஓராண்டு ஆன நிலையிலும் தெப்பக்குள மேட்டில் வாழ்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால், காந்தி ஜெயந்தி அன்று போராட்டம் நடத்த உள்ளோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil