வாழ்வில் ஈடுக்கட்ட முடியாத இழப்பு காடுவெட்டி குருவின் மரணம்: பா.ம.க தலைவர் ராமதாஸ் உருக்கம்

அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது

பாமக-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி குரு (58) சென்னையில் நேற்று காலமானார்.

உடல் நலப் பாதிப்பு காரணமாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரலில் பிரச்னை இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் காடுவெட்டி குரு மருத்துவமனையில் காலமானர்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், காடுவெட்டியின் இறப்புக் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாவீரன் குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு மாவீரன் குரு சொந்தக்காரர் ஆவார்.

எனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும்.   சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் மாவீரன் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் மாவீரன் குரு.

நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான மாவீரன் குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் மாவீரன் குருவின் மறைவு தான்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,காடுவெட்டி குரு உயிரிழந்ததை தொடர்ந்து அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
9 அரசுப்பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

×Close
×Close