வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல, பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் உரிய பதிலை சொல்லும் என அவரது மகன் கனலரசன் மற்றும் குடும்பத்தினர் பரபரப்பு பேட்டியளித்துள்ளனர்.
இதுகுறித்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் குடும்பத்தினர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "பாமக தலைமையை நம்பி இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல. பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் உரிய பதிலை சொல்லும். பிறரை விமர்சித்து பேசுமாறு, குருவை தூண்டிவிட்டு அவரை பலருக்கு எதிரியாக்கியது பாமக.
குருவிற்கு எதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்? அவர் இறந்துவிடுவார் என கூறினர். குருவை சூழ்நிலை கைதியாக பாமக வைத்திருந்தது. எங்களது வாயை அடைக்க எங்களிடம் பேரம் பேசுகின்றனர். வன்னியர் சமுதாயத்திற்கு பாமக எதுவும் செய்யவில்லை. குரு இல்லாமல் பாமக இல்லை.
மாற்றம், முன்னேற்றம் என்று கூறியவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் கூட்டணி வைத்துள்ளனர். 35 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்த குரு, கடைசி காலத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்தார். குருவை விமர்சித்த கட்சியினரிடம் பின்னர் பூங்கொத்து கொடுத்து உறவு கொண்டாடியது பாமக தலைமை. குருவிற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முன்வரவில்லை.
சொந்த ஊரிலேயே இருக்கக் கூடாது என எங்களை மிரட்டுகின்றனர். எங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாங்கள் வாழ்வதா, சாவதா என்றே தெரியவில்லை
உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாக கருதினர். எங்கள் குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.
பாமக தலைமைக்கு வன்னிய சமுதாயமே பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது. தேர்தலில் பாமகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே குழு அமைத்திருக்கிறோம். அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டோம்" என்று அவர்கள் கூறினர்.