TN Assembly Election 2021 News In Tamil : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய வேளையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக, அக்கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, நெமிலி பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது, தனது தந்தை காடு வெட்டி குருவின் மரணத்தில் பாமக வின் பங்கு என்ன என்பது குறித்தும், ராமதாஸ் குடும்பத்தினரால் தங்கள் குடும்பம் அனுபவித்த இன்னல்கள் குறித்தும் பேச தொடங்கியுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த சுமார் 150 பாமக தொண்டர்கள், விருதாம்பிகையை பிரசாரம் செய்ய விடாமல் அவர் வந்திருந்த வாகனத்தை மறித்து, ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், விருதாபிகையை மீட்டு அவரை அப்புறப்படுத்தினர். அதிகப்படியான காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதியில் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இருப்பினும், பதற்றமான சூழலே அப்பகுதியில் நிலவுகிறது. இதனிடையே, விருதாம்பிகையின் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் தனது தந்தை காடு வெட்டி குருவை, ராமதாஸ் மருத்துவக் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.