வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கடந்த 2 தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்யச் சென்றனர்.
அப்போது போலீசாருக்கும்- காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. போலீசார் மீது காக்கா தோப்பு பாலாஜி தாக்குதல் நடத்தியதையடுத்து அவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
இந்நிலையில், சென்னையில் என்கவுன்ட்டரில் உயிரிழந்த காக்கா தோப்பு பாலாஜியின் உடலை ஆர்.டி.ஓ ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, ஆர்.டி.ஓ இப்ராஹிம், மருத்துவமனைக்கு வருகை தந்து, உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அவரது குடும்பத்தினரிடமும் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கண்மணி, காளஹஸ்திக்கு சென்ற தனது மகனை போலீசார் அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்ததாக கூறினார். காக்கா தோப்பு பாலாஜியின் உடலை உறுப்பு தானம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவருடைய தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், காக்கா தோப்பு பாலாஜியை திட்டமிட்டே போலீசார் என்கவுன்ட்டர் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“