ஒரு ஆத்திரம் அவசரம்னா எங்க “டாய்லெட்” இருக்குனு தேடுறது நம்ம எல்லாருக்கும் ஒரு தலைவலியான விசயம். பெண்கள்னா சொல்லவே வேண்டாம்… சரின்னு வேற வழியில்லாம கார்ப்பரேஷன் டாய்லெடுக்குள்ள நுழைஞ்சா, ஏன்டா போணோம்னு நமக்கே தோணும். மெரினா பீச்ல இருக்குற எல்லா கழிப்பறைகளும் இதுக்கு ஒரு நல்ல உதாரணம். அங்க ஒரு சில கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்துவிடாம இருக்குற கொடுமையும் கூட உண்டு.
Advertisment
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சூப்பரான தீர்வை கையாள உள்ளது. அது என்னனா, பொதுமக்கள் ஒரு கழிப்பறையின் தூய்மை நிலவரம் என்னனு மாநகராட்சிக்கு ஒரு ஆப் மூலமா சட்டனு சொல்றது தான். இந்த புகாரையும் பொதுமக்கள் தரும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்தா சென்னை முழுவதும் மிகவும் தூய்மையான கழிப்பறைகளை பயன்படுத்த முடியும்.
சென்னை சாந்தோமில் நேற்று (03/04/2022) நடைபெற்ற சர்வதேச கழிப்பறைத் திருவிழாவில் கக்கூஸ் என்ற அந்த செயலியை வெளியிட்டார் திருவல்லிக்கேணி - சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வில் உதயநிதியுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மேயர் ஆர். ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், மைலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“சென்னையில் உள்ள கழிப்பறைகள் மிகவும் தூய்மையான கழிப்பறைகளாக இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளின் நிலையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் உதவியுடன் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநகராட்சியில் அமைந்திருக்கும் 1497 கழிப்பறைகளை இந்த செயலியில் இணைத்துள்ளனர். அதில் 806 கழிப்பறைகள் மால்கள், வர்த்தக தளங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் அமைந்துள்ளன.
சென்னை பெருநகரில் உள்ள மாநகராட்சி மற்றும் தனியார் வசம் இருக்கும் கழிப்பறைகளின் நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அங்கே நிலவும் சுத்தம் குறித்து மதிப்பெண்கள் வழங்கவும், புகார்கள் தெரிவிக்கும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் உள்ள சுகாதாரமான கழிப்பறைகள் கண்டறியப்பட்டு சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு உதயநிதி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil