Advertisment

ஜூன் 3-க்குள் தி.மு.க உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவோம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
mk stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தி.மு.க.தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது

Advertisment

publive-image

கலைஞர் பிறந்த திருவாரூரில், நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.

"தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்!", என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

"உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், பல்லாயிரம் ஆண்டுப் பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர், இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி, பல முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர் 95 ஆண்டு கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வறியா போராளி கலைஞர் ஆவர்.

போட்டியிட்ட - 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனை நாயகர் நாய்த்தமிழ் நாட்டினை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த தலைசிறந்த நிர்வாகி - அரைநூற்றாண்டு காலத் திரையுலகத்தின் திசையைத் தீர்மானித்த வசன கர்த்தா - எழுஞாயிறு எழும் நாளெல்லாம் எழுதித் தீட்டி இலக்கியமாய் இயங்கிய எழுத்து இலக்கணம் மேடையில் மெல்லிய பூங்காற்றாகவும் எரிமலைத் தீம்பிழம்பாகவும் காட்சியளித்த காந்த குரலுக்குச் சொந்தக்காரர் - நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் -நமக்கு உயிரானவர் - நமக்கு கருவானவர் - நமக்குத் திருவானவர் - இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வரும் சூன் 3ஆம் நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

நம்மை நமக்கே அடையாளம் காட்டிய, உயிரினும் மேலான அன்புத் தலைவர் 1924 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாள் திருக்குவளையில் பிறந்து தரணியையே ஆட்சி செலுத்தும் தலைவராக வளர்ந்தார். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரைக் கண்டு - அவர் முகத்தைத் தரிசித்து அவரது புன்னகையை ஏற்று நம்மை நாமே - உரமேற்றிக் கொண்டோம்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் இயற்கை நம்மிடம் இருந்து அவரைப் பிரித்து - வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தாலாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் அவரை ஓய்வெடுக்க வைத்தது. அன்று முதல் காவியத் தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்ற தினமும் நாம் பணியாற்றி வருகிறோம்.

'பணியைத் தொடங்கிவிட்டாயா? வெற்றிக்கு திட்டமிட்டு விட்டாயா?' என்று 'முரசொலி'யில் கலைஞர் அவர்களே எழுதிக் காட்டியதைப் போன்ற உத்வேகத்துடன், திராவிட நாயகர்- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உழைத்து வருகிறோம். திராவிட நாயகர் – தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதலிருந்து, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்துத் நேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம்.

ஆறாவது முறையாக தாய்த்தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வார்ப்பாக மட்டுமல்ல, தலைவர் கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

'சொன்னதைச் செய் - செய்வதைச் சொல்' என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்திய நாட்டில் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக் கொண்டு சென்று மகுடத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கழகமும் கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க ”உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம்.

தமிழின தலைவர் கலைஞர் அவர்களை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் – சூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை- கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை" அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் சூன் 3 ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் - 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு - தமிழின உரிமைகள் - தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம் - மதச்சார்பின்மை - சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் சமூக நீதி- பெண்ணுரிமை - இலக்கிய வளர்ச்சி - கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள்.

எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க!

அவர் உருவாக்கிய கொள்கைகள் வெல்க!", என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment