முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 95வது பிறந்தநாள் இன்று(ஜூன்.3) கொண்டாடப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி' என்று அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் இசை சார்ந்த எளிய குடும்பத்தில் 1924, ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் தட்சிணாமூர்த்தி. நமக்கு புரியும்படி சொல்லவேண்டுமாயின் கலைஞர் கருணாநிதி. தந்தை, முத்துவேலர் நாட்டு வைத்தியர். தாய் - அஞ்சுகம். உடன் பிறந்தவர்கள் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரண்டு சகோதரிகள்.
திருக்குவளை தொடக்கப்பள்ளியிலும், திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியிலும் படித்த கருணாநிதி, பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கவிதை, பேச்சில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். விளையாட்டிலும் தீவிர ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளி ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார்.
சிறு வயதிலேயே தன்னம்பிக்கை மிக்கவராகவும், மன உறுதி உடையவராகவும் இருந்தார். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் இயங்கியிருக்கிறார் கருணாநிதி. `பழனியப்பன்' என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். 'தூக்குமேடை', 'பரபிரம்மம்', சிலப்பதிகாரம்' உள்பட 17 நாடகங்களை எழுதியுள்ளார். `தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்' என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார். அதன்பிறகே இவர், `கலைஞர் கருணாநிதி' என்று அழைக்கப்பட்டார்.
'நளாயினி', 'பழக்கூடை', 'பதினாறு கதையினிலே' உள்பட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய 'தென்பாண்டிச் சிங்கம்' நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 'ராஜராஜன்' விருதைப் பெற்றது. எளிய நடையில் திருக்குறளை ஆய்ந்து எழுதிய `குறளோவியம்', கருணாநிதியின் முக்கிய இலக்கியப் பங்களிப்பாகும். `நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.
1946-ல் `ராஜகுமாரி' திரைப்படத்தில் இருந்து கருணாநிதியின் திரைப்பயணம் தொடங்குகிறது. 1952-ல் வெளிவந்த `பராசக்தி' திரைப்படம் தமிழ்த்திரையுலகை வியந்து பார்க்க வைத்தது. 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு பணியாற்றினார். 'மந்திரி குமாரி', 'பூம்புகார்', 'மனோகரா', உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பொன்னர் சங்கர் என்ற கருணாநிதியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கருணாநிதி, "1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 1967, 1971-தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயித்தார். 2016 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும்.
90 வயதுகளைக் கடந்தபிறகும், சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களில் தீவிரமாக இருந்தார் கருணாநிதி. 2016, அக்டோபரில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் எடுத்துக்கொண்ட மாத்திரைகளாலேயே ஒவ்வாமை ஏற்பட்டு ‘ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம்’ என்ற நோய்த்தாக்கமும் ஏற்பட்டது. ஆனால், தீவிர சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்க மறுக்க, ஆகஸ்ட் 7 2018ல் அவரது இன்னுயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.