/tamil-ie/media/media_files/uploads/2022/03/cm.jpg)
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு மல்லுக்கட்டு நடந்தாலும் எந்தவித போட்டியும் இல்லாமல் திமுக கைப்பற்றிய மாநகராட்சி என்றால் அது தூத்துக்குடி மட்டுமே. இதற்கு முக்கிய காரணம் தூத்துக்குடியில் அசைக்க முடியாத சக்தியாக இன்னமும் இருக்கும் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி குடும்பத்தினர் இன்னமும் செல்வாக்குடன் முக்கிய பொறுப்புகளை தக்க வைத்துக் கொண்டிருப்பது தான். அதனால் தான் அரவமே இல்லாமல் பெரியசாமியின் மகன் மேயராக முடிந்திருக்கிறது.
அவரது தந்தையின் திமுக விசுவாசத்திற்கு கிடைத்த பரிசாகவும் இதைக் கருதலாம் என்று சொல்கின்றனர் திமுகவினர். மொத்தத்தில் தூத்துக்குடி பெரியசாமி குடும்பத்தினரின் கண்ணசைவில் இருப்பதே உண்மை.
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், சிபிஎம், சிபிஐ, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டிலும் என திமுக கூட்டணி 50 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-07-at-17.39.07-1.jpeg)
சுயேச்சை வேட்பாளர்களையும் திமுக தம் பக்கம் இழுக்க திமுக கூட்டணியின் பலம் 54 ஆக உயர்ந்தது. இதனால் தனிப் பெரும்பான்மையுடன் தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியிருக்கிறது திமுக. அனைவரும் எதிர்பார்த்தது மாதிரியே போட்டியே இல்லாமல் மேயர் ஆனார் ஜெகன். பதவியேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சி திமுகவினர் இடையே நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது.
கலைஞரின் முரட்டு பக்தர் பெரியசாமி வழங்கிய 111 சவரன் சங்கிலியை அவருடைய மகனுக்கு அணிவித்து நெகிழ்ந்திருக்கிறார் திமுக எம்.பி கனிமொழி. கனிமொழி எம்பி மாநகராட்சி மேயருக்கான செங்கோலையும், மேயருக்கு அணிவிக்கப்படும் 111 சவரன் தங்கச் சங்கிலியை அணிவித்தபோது ஜெகன் கண்களில் நீர் ததும்ப நெகிழ்ந்து போனார். தூத்துக்குடி மாநகராட்சியாக மாற்றப்பட்டபோது, மேயர் அணிவதற்காக 111 சவரன் தங்கச் சங்கிலியை பெரியசாமி தனது சொந்த செலவில் செய்து மாநகராட்சிக்கு கொடுத்தார்.
அதிலிருந்து மேயராகப் பதவியேற்பவர், அந்த தங்கச் சங்கிலியை அணிய வேண்டும். மறைந்த தூத்துக்குடி பெரியசாமி 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கட்சியை தனது கட்டுப்பாட்டில், கண்ணசைவில் வைத்திருந்தார். ஆனால் ஒரு முறை கூட அமைச்சராகவோ, பிற அரசு பதவிகளுக்கு அவர் முயன்றதில்லை என்பது கண்கூடு. இந்நிலையில் அவரது மகனும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமிக்கு மேயர் பதவி கொடுத்தால் என்ன தவறு என கனிமொழியே திமுக தலைமையிடம் பேசி மேயர் பொறுப்பை வாங்கி கொடுத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/mayor-tcn-with-minister-and-kanimozhi.jpg)
இந்த நிலையில் தூத்துக்குடி வந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் உடையது. 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழி வெற்றி பெற்று எம்.பி ஆனார். திமுக தலைவர் கருணாநிதி வாரிசுகளில் அரசியல் ரீதியாக இரண்டாவது இடத்தில் இருப்பவராக் கருதப் படும் கனிமொழிக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத நிலையில் முக்கிய திருப்புமுனையாக தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதனால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்றும் சொல்லப்பட்டது. அதேசமயம் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பின்னர், கனிமொழிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்ச்சித்தனர். ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி தான் என கட்சியின் சீனியர்கள் குரல் கொடுத்தாலும் கனிமொழியின் முக்கியத்துவத்தையும் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
இதையும் படியுங்கள்: காவல் துறை பாதுகாப்பு கோரும் அமைச்சர் சேகர்பாபு மகள்; காரணம் என்ன?
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 5 இல் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. கோவில்பட்டியில் மட்டும் அதிமுகவின் கடம்பூர். ராஜூ வென்று எம்.எல்.ஏ ஆனார். ஒட்டுமொத்தமாக திமுகவின் கோட்டை என்ற அளவிற்கு தூத்துக்குடி மாவட்டம் மாறியது.
சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அபார வெற்றி பெற்றது. இதற்கு கனிமொழி, அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவன், அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில் வெற்றி களிப்புடன் தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சனியன்று இரவு தூத்துக்குடி வந்த ஸ்டாலின் மறுநாள் தனது தந்தை கலைஞரின் வெண்கல சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது மக்கள் நமக்கு தந்தது பதவி இல்லை, பொறுப்பு. உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரையும் எச்சரிக்கும் விதமாக பேசினார்.
திங்கள் காலையில் பன்னாட்டுத் தரத்தில் உருவாகி வரும் பர்னிச்சர் பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியவர் விழா மேடையிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து பலநூறு கோடி ரூபாய்களுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டு தனது அடுத்த நாகர்கோவில் நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு கிளம்பினார்.
கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலினுக்கு முன்னதாக கனிமொழி பேசினார். அப்போது அவர் 'கலைஞரின் அரசியல் வாரிசு ஸ்டாலின்' என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக திமுகவில் ஒரு தரப்பும், கட்சிக்கு வெளியே சிலரும் கலைஞரின் அரசியல் வாரிசு யார்? என்கிற விவாதங்களை அவப்போது எழுப்புவது உண்டு. வெளிப்படையாக சிலர் ஸ்டாலினா, கனிமொழியா? என விவாதிப்பார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தனது சொந்த தொகுதியில் கலைஞர் சிலை திறப்பு விழாவை கனிமொழி பயன்படுத்திக் கொண்டார். இதன்மூலம் ஸ்டாலினுக்கு போட்டி நான் இல்லை என்பதை கனிமொழி உணர்த்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-07-at-17.39.07-2.jpeg)
முன்னதாக, அரசியல் ரீதியாக அனைவரியிடமும் பேசிய ஸ்டாலின் யாராக இருந்தாலும் சரி , என்றுமே கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதே திமுக தொண்டனுக்கு அழகு. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று பேசி தூத்துக்குடி கனிமொழி கோட்டையாக இருந்தாலும் அதில் ஹீரோ தான் மட்டுமே என நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.
-த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.