Kalaignar m karunanidhi first death anniversary: முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில்சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது.
இந்த அமைதிப் பேரணியில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, அவருடைய நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு இன்று மாலை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் சாலையில் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.
பரூக் அப்துல்லா வருவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் காஷ்மீர் சூழல் காரணமாக அவர் வரும் வாய்ப்பு இல்லை. புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரை நிகழ்த்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலையே சென்னை வந்தார். சிலை திறப்பு முடிந்ததும், மாலை 5.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் உரை நிகழ்த்துகிறார்கள். பரபரப்பான அரசியல் சூழலில் மம்தா உள்ளிட்டவர்களின் உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.